Last Updated : 28 Oct, 2016 03:58 PM

 

Published : 28 Oct 2016 03:58 PM
Last Updated : 28 Oct 2016 03:58 PM

ராணுவ ரகசியங்களை அளிக்கும் இந்திய உளவாளிகளை பாக். ஐஎஸ்ஐ அணுகுவது எப்படி?

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய ராணுவத் தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு ஐஎஸ்ஐ என்ன 'சன்மானம்' அளிக்கிறது என்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி இணை ஆணையர் ரவீந்திர ஜாதவ் கூறும்போது, "மாதத்துக்கு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 வரை தகவல்களின் பயனைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. நிறைய ஆவணங்கள் கைமாறுகின்றன. அதில் சில பயனுள்ளவையாக இருக்கும்; பல பயனற்றவையாக இருக்கும்" என்றார்.

பாகிஸ்தான் தூதரக ஊழியர் மஹ்மூத் அக்தர், ஐஎஸ்ஐ ஏஜெண்டாகச் செயல்பட்டவர். இவர் ராஜஸ்தானிலும், குஜாரத்திலும் இருக்கும் தங்களது கைக்கூலிகளிடம் பணத்துக்கு கஷ்டப்படும் நபர்களை உளவு வேலைகளுக்கு தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான மவுலானா ரம்ஜான் கான், ராஜஸ்தானின் நாக்பூர் மாவட்டத்தில் மசூதியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். மேலும் இவர் இஸ்லாமிய மதபோதகரும் கூட. இவருக்கு மசூதியைப் பார்த்துக் கொள்வதற்காக ரூ.2000-மும், ஆசிரியராக இருப்பதற்கு ரூ.3,000-மும் வழங்கப்படுகிறது என்கிறார் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

ஓர் உளவாளியாக இவரைப் போன்றவர்களை குறிவைக்கக் காரணம், அப்பகுதிகளில் இவருக்கு இருக்கும் மரியாதை. இவரை ராணுவத்தின் பணியிலிருக்கும் பல அதிகாரிகளும் எல்லைப் பாதுகாப்புப் படை ஜவான்களும் சந்திக்கின்றனர். மேலும், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால் அந்த இடத்தின் புவி அமைப்பை அவர் நன்றாக அறிந்து வைத்துள்ளார். இந்நிலையில்தான் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அக்தர் இவரை அணுகி பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கக் கோரியுள்ளார். இதற்கு நல்ல சன்மானம் அளிப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான சுபாஷ் ஜங்கீரும் சுலபமாக பொறியில் சிக்கும் தன்மை கொண்டவர்தான். இவர் மளிகைக் கடை வைத்திருந்தார், அது சரியாக ஓடவில்லை. இவரையும் ஓராண்டுக்கு முன்பாக ஐ.எஸ்.ஐ. அமர்த்தியுள்ளது.

"ஜங்கீர் கடும் கடன் சுமையில் தத்தளித்தார். கானுக்கு இவரை நன்றாகத் தெரியும். இதனையடுத்து இவரது பணக்கஷ்டத்தை சாக்காக வைத்து அவரையும் கான் உள்ளே இழுத்துள்ளார்" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் கான் செய்தது மேலும் சுவாரசியமானது, ஜங்கீரை துணை ராணுவப் படை அதிகாரி என்று அக்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார், காரணம் அதிக பணம் பறிக்கத்தான்.

இதனையடுத்து ராணுவ வீரர்கள் யாரேனும் இந்த வலையில் பணத்திற்காக விழ வாய்ப்புள்ளதையும் விசாரணையாளர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதோடு, இன்னும் எவ்வளவு பேர் இந்தியாவின் இப்பகுதியில் பாகிஸ்தான் உளவு நிறுவனம ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறது போலீஸ் துறை.

ஷோயப் என்ற 3-வது நபரையும் ஜோத்பூரில் வியாழனன்று ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தனர். இவரை விசாரித்தால் இன்னும் சில தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸார் உறுதி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி >>பணத்துக்காக இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற 2 பேர் கைது: உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரி சிக்கினார் - 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x