Published : 26 Oct 2016 12:29 PM
Last Updated : 26 Oct 2016 12:29 PM
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், அவரது மகனும், அம்மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ், அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால் யாதவ் ஆகியோருக்கு இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
சமாஜ்வாதியில் நிலவிவந்த சர்ச்சைகளை அம்பலப்படுத்தும் விதமாக நடந்தது, அண்மையில் லக்னோவில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் முலாயம் சிங் தலைமையில் உயர்நிலைக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் அமர்சிங் மற்றும் ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவாக முலாயம் சிங் பேச, புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டதாக அகிலேஷ் மீது குற்றம் சாட்டிய ஷிவ்பால் அவரிடமிருந்த மைக்கையும் பிடுங்கினார். இதனால் அகிலேஷ், முலாயம் சிங் மற்றும் ஷிவ்பால் யாதவுக்கு இடையே நேரடியாக கடும் வாக்குவாதம் மூண்டது. பெரும் கூச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை உத்தரப் பிரதேசம் சந்திக்கவிருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்குள் நிகழும் இத்தகைய கூச்சல் குழப்பங்கள் மற்ற கட்சிகளுக்கு சாதகமாகவே அமையும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஷிவ்பால் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து "உட்கட்சிப் பூசல் ஏதுமில்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது" எனக் கூறி வருகிறார்.
இத்தகைய சூழலில் 2017 தேர்தல் களம் சமாஜ்வாதிக்கு எப்படி இருக்கும் என அலசல் ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன. உத்தரப் பிரதேச தேர்தலைப் பொருத்தவரை இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் தேர்வில் நிச்சயமாக மாநிலத் தலைவர் ஷிவ்பால் யாதவும் கருத்து சொல்வார் என்பதால் வேட்பாளர்கள் தேர்வில் சலசலப்பு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதேவேளையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது அகிலேஷ் யாதவ் மையப்படுத்தப்படுகிறாரா இல்லையா என்பதும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் நவம்பர் 3-ம் தேதி சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலம் முழுவதுமான விகாஸ் ரத யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை கட்சி எவ்வளவு தூரம் வெற்றிகரமாக நடத்துகிறதோ அதற்கேற்ப தேர்தல் பலன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், சமீப காலமாக சமாஜ்வாதியில் நிலவிவரும் பூசல்கள் நிச்சயமாக பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, சமாஜ்வாதி சலசலப்பால் முஸ்லிம் வாக்காளர்கள் கவனம் பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் 20%. இந்த வாக்கு வங்கியை அனைத்து அரசியல் கட்சிகளுமே கவனமாக அணுகிவருகின்றன. இந்நிலையில், சமாஜ்வாதி குழப்பத்தால் வேறு கட்சிக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த 20% வாக்குகளில் பெரும்பாலானவை பகுஜன் சமாஜ் கட்சிக்கே செல்லும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. காரணம், சமாஜ்வாதிக்கு மாற்றாக பாஜகவைக் காட்டிலும் பகுஜன் சமாஜ் கட்சியையே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர் என்பதே எனவும் கூறப்படுகிறது.
பகுஜன் பலம் முஸ்லிம் வாக்குவங்கியாக இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா சாதி அடிப்படையில் வாக்குகளை தன்வசமாக்க வியூகம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ராமர் கோயில், அருங்காட்சியகம் என இந்துத்துவா அரசியலை பாஜக முன்வைத்துள்ள நிலையில், மாநிலத்தின் உயர் சாதியினரையும், யாதவ் சமூகத்தைத் தவிர இருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது. இந்த வியூகம் பலித்துவிட்டால் பாஜகவுக்கு 2017 தேர்தல் சாதகமே.
அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தை நவீனமயமாக்கலில் அவர் அதிக கவனம் செலுத்தி வருவதால் கற்றறிந்த மக்களிடம் அகிலேஷ் செல்வாக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது என்றாலும் தற்போது நிலவும் சமாஜ்வாதி உட்கட்சி பூசல் தொடர்ந்தால் அவர்களும் பாஜக பக்கம் சாய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இத்தகைய சூழலில், உத்தரப் பிரதேசத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அகிலேஷ் யாதவ் முன்பைவிட பலமிக்கவராக, கட்சியினர் மற்றும் மக்கள் நம்பிக்கைக்குரியவராக, உணர்வு ரீதியாக கட்டுப்பாடு மிக்கவராக இருப்பது அவசியமாகிறது. அகிலேஷ் யாதவுக்கு அவரது குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவார்களா இல்லை தொடர்ந்து அவரை பலவீனப்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். காயமடைந்த கட்சியின் தேர்தல் எதிர்காலம் எப்படித்தான் இருக்கப்போகிறதோ?
- தமிழில்:பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT