Published : 18 Aug 2022 05:00 AM
Last Updated : 18 Aug 2022 05:00 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட் டம், வைக்கப்ரயார் பகுதியைச் சேர்ந்தவர் சிமிமோள்(50). இவர் கடுதுருத்தி பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வு எழுதினார்.
தீவிரமான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிமிமோள் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு இந்தத் தேர்வினை எழுதினார். சிமிமோளிற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் ஆக்சிஜன் கலன்கள், சுவாசம் பெறுவதற்கான குழாய் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அந்த தனி அறையில் சிமிமோள் 12-ம் வகுப்பு தனித்தேர்வை எழுதினார்.
இதுகுறித்து சிமிமோள் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறுகையில், “என் அம்மா சரோஜினியும், தங்கை சினிமோலும் என் உணர்வைப் புரிந்து கொண்டு இந்தத் தேர்வினை எழுத பெரும் சிரமம் எடுத்து என்னை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர். முதலில் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். என் கணவர் ஜோதிராஜ் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துபோனார்.
அவரது இறப்பிற்கு பின்பு எனக்கு நுரையீரல் பிரச்சினை வந்தது. ஆக்சிஜன் சிலிண்டரின் உதவி யுடன் தான் சுவாசிக்கமுடியும். நான் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்தேன். சுவாசப் பிரச்சினையின் காரணமாக வேலையை விட்டுவிட்டேன். என் ஒரே மகள் அம்ரிதா பல் மருத்துவம் பயின்று வருகிறார். எனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தது. கேரள எழுத்தறிவு இயக்கத்தின் வழியாகப் படிக்கத் தொடங்கினேன். அந்தப் பயணமும் மிகவும் சவாலானது. தேர்வும்நன்றாக எழுதியுள்ளேன். முடிவுக்காக காத்திருக்கிறேன். தொடர்ந்து மேல்படிப்பு படிக்கவும் ஆசை இருக்கிறது” என்றார்.
ஏற்கெனவே கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் 105 வயதில் நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வெழுதி வென்ற
கொல்லத்தைச் சேர்ந்த பாகீரதி, ஆழப்புழாவைச் சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி ஆகியோர் மத்திய அரசின் நாரிசக்தி புரஸ்கார் விருதினைப் பெற்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மனதின் குரல் நிகழ்ச்சியில் இவர்களைப் பற்றிப் பேசினார். இந்நிலையில் கேரள எழுத்தறிவு இயக்கத்தின் அடுத்த பாய்ச்சலாக ஆக்சிஜன் உதவியுடன் தேர்வெழுதிய சிமிமோள் கொண்டாடப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT