Published : 17 Aug 2022 05:39 PM
Last Updated : 17 Aug 2022 05:39 PM
புதுடெல்லி: இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்று கூறி, 'மேக் இந்தியா நம்பர் 1' என்ற பிரசார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். டெல்லியில் நடந்த தொடக்க நிகழ்வில், “நாட்டின் குடிமக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
“சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தி இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நம் இந்திய நாட்டை மீண்டும் உலகின் ‘நம்பர் 1’ நாடாக மாற்ற வேண்டும். அந்த நோக்கத்தில் 'மேக் இந்தியா நம்பர் 1' என்ற தேசிய வளர்ச்சிக்கான திட்டத்தை இன்று தொடங்கி உள்ளோம். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து, அதன் இலக்கினை அடைய பணியாற்ற வேண்டியது அவசியம்" என கெஜ்ரிவால் பேசினார்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களையும் காட்டமாக விமர்சித்திருந்த அவர், “நாட்டின் வளர்ச்சிக்காக நாம் இந்த அரசியல் தலைவர்களை நம்பி இருக்க முடியாது. அப்படி செய்வது நமக்கும், நாட்டுக்குமான பின்னடைவு.
இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்ற பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகளை திறக்க வேண்டியது அவசியம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
“நாட்டின் விடுதலைக்குப் பின்னர் பல சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. இருந்தாலும் அவை அனைத்தும் இந்திய விடுதலைக்குப் பின்னர் விடுதலை அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று பின்தங்கி இருக்கிறது” என்றார்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் ஆம் ஆத்மி களம் கண்டுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சியை உள்ளடக்கியதாகக் கூறி, இந்த இயக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியிருப்பது கவனத்துக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT