Published : 17 Aug 2022 05:02 AM
Last Updated : 17 Aug 2022 05:02 AM

தேசிய கீதம் ஒலித்ததால் ஸ்தம்பித்த தெலங்கானா - பொதுமக்களின் தேசப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு

தெலங்கானா மாநிலம் முழுவதும் நேற்று காலை சரியாக 11.30 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இருந்த இடத்திலேயே எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினர்.

ஹைதராபாத்: முதல்வர் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று, நேற்று காலை 11.30 மணிக்கு தெலங்கானா மாநிலம் முழுவதும் சாலைகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் இருந்த இடத்திலேயே நின்று ஒரு நிமிடம் வரை தேசிய கீதம் பாடலுக்கு மரியாதை செலுத்தி, பிறகு தங்களது பணிகளில் கவனம் செலுத்தினர்.

தெலங்கானா மாநிலத்தில் 75-வது சுதந்திர தின விழாவினை, வைர விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, நேற்று, முதல்வர் சந்திரசேகர ராவின் அழைப்பின் பேரில் தெலங்கானா மாநிலம், முழுவதும் அனைத்து கூட்டுச்சாலைகள், அரசு அலுவலகங்கள், பஞ்சாயத்து, ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் நமது தேசிய கீதமான ‘ஜனகண மன’ பாடல் ஒலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சரியாக நேற்று காலை 11.30 மணிக்கு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது. இதனை முன்கூட்டியே அறிந்த பொதுமக்களில் பலர் தேசியக் கொடியை ஏந்தி சாலையில் குவிந்தனர்.

11.30 மணிக்கு ஒரு நிமிடம் முன், சாலை சந்திப்புகளில் ஒலிப் பெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியானது. அனைவரும் அவரவர் இருக்கும் இடத்தில் நிற்க வேண்டுமென அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து சாலைகள் முழுவதும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்ததால், மக்கள் ஆங்காங்கே நின்று விட்டனர்.

பஸ், கார், ஜீப்கள், பைக்கு களில் சென்ற அனைவரும் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கி விட்டனர். ஹைதராபாத் மெட்ரோ ரயில்கள் கூட ஒரு நிமிடம் வரை நிறுத்தப்பட்டது. மெட்ரோவில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்றனர்.

சரியாக 11.30 மணிக்கு 2 முறை சைரன் ஒலிக்கப்பட்டு, அதன் பின்னர் நம் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழை முதல் பணக்காரர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரு நிமிடம் தேசிய கீதத்தை பாடியபடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

அபிட்ஸ் கூட்டு ரோடு பகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் சில அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நேற்று காலை 11.30 முதல் 11.31 மணி வரை தெலங்கானா மாநிலமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x