Published : 16 Aug 2022 01:12 PM
Last Updated : 16 Aug 2022 01:12 PM

காஷ்மீர் | ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி

காஷ்மீர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் பலியானார்கள். பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இந்திய - சீன எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற வாகனம் காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

விபத்துக்குள்ளான வாகனத்தில் பாதுகாப்புப் படையினர் 37 பேர் இருந்துள்ளனர். விபத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ராணுவ வீரர்கள் அனைவரும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது”

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்: காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று நடந்த இருவேறு கையெறி குண்டு தாக்குதல்களில் ஒரு போலீஸ்காரரும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர்.

நேற்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் பலத்த பாதுகாப்புடன் காஷ்மீரிலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் நடந்தன இந்த நிலையில் காஷ்மீரில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த தீவிரவாத தாக்குதலில் காவலர் ஒருவரும், பொது மக்களில் ஒருவரும் காயமடைந்தனர்.

தாக்குதல் குறித்து போளீஸார் தரப்பில், “புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் கரண் குமார் சிங் என்று அடையாளம் காணப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

மற்றொரு தாக்குதலில், ஸ்ரீநகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீஸ் ஒருவர் காயமடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டது

காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x