Published : 16 Aug 2022 05:51 AM
Last Updated : 16 Aug 2022 05:51 AM
புதுடெல்லி: நேற்று கொண்டாடப்பட்டது நாடு சுதந்திரம் அடைந்த 75-வது சுதந்திர தினமா அல்லது 76-வது சுதந்திர தினமா என்ற குழப்பம் பொது மக்களிடையே ஏற்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்த விழா, ஆசாதி கா அம்ரித் மகோத் சவ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஹர் கர் திரங்கா (வீடுதோறும் மூவர்ணக் கொடி) என்ற பெயரில் கொண்டாட்டங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால், நேற்று கொண்டாடப்பட்ட விழா 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவா அல்லது 76-வது சுதந்திர தின விழாவா என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர் இதுதான் 75-வது விழா என்றும் சிலர் 76-வது சுதந்திர தின விழா என்றும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-வது ஆண்டு என்ற புதிய மைல் கல்லை எட்டுவதால் இந்த ஆண்டு மக்களிடையே, இதுபோன்ற அதிகப்படியான கேள்விகள் எழுந்தன.
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதையொட்டி பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுதந்திர தின அமுதப் பெருவிழா (ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ்) என்ற ஒரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 75 -வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடுவதற்கான 75 வார கவுண்ட்டவுன் நிகழ்ச்சியாக இது தொடங்கப்பட்டது.
200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டீஷாரின் ஆட்சியில் இருந்த இந்தியா, பலரது உயிர் தியாகத்தாலும் பல போராட்டங்களுக்கும் பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்15-ம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது.
இதன்படி, இந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை 1948-ம் ஆண்டு கொண்டாடியது. 10-வது சுதந்திர தினத்தை 1957-ம் ஆண்டிலும், 20-வது சுதந்திர தினத்தை 1967-ம்ஆண்டிலும் 30-வது சுதந்திர தினத்தை 1977-ம் ஆண்டிலும் கொண்டாடியது.
தொடர்ச்சியாக 50-வது சுதந்திர தினமானது, 1997-ம் ஆண்டு பொன்விழா என்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து 70-வது சுதந்திர தினம் 2017-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை 2022-ம் ஆண்டு கொண்டாடும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை சுதந்திர தினங்களை கொண்டாடியது என்று நாம் கணக்கிட்டால் அது 76 -ஆக இருக்கும். ஏனெனில் நாம் நமது முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை 1947-ம் ஆண்டிலேயே கொண்டாடிவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிஞர் பெருமக்கள் விளக்கம்
எனவே, எத்தனையாவது சுதந்திர தினம் என்று பார்த்தால் நேற்று கொண்டாடியது 75-வது சுதந்திர தின நிறைவு விழா ஆகும். சுதந்திர தின விழாவை, எத்தனை முறை கொண்டாடினோம் என்று பார்த்தால் நேற்று கொண்டாடியது 76-வது சுதந்திர தினமாக இருக்கும் என்று அறிஞர் பெருமக்கள் விளக்கியுள்ளனர்.
எனவே, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது என்பதே சரி. எனவே, ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நேற்று 75-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாக்களை நாட்டு மக்கள் கொண்டாடியதைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் நேற்று கொண்டாடியது 76-வது சுதந்திரதின விழா என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT