Published : 16 Aug 2022 07:46 AM
Last Updated : 16 Aug 2022 07:46 AM

பூமியிலிருந்து 30 கி.மீ. உயரத்தில் பறந்த தேசிய கொடி

பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் பறக்கும் தேசிய கொடி.

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று நாடு முழுவதும் குடிசை முதல் கோபுரங்கள் வரை தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு ஒரு படி மேலே சென்று பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் தேசிய கொடியை பறக்க விட்டிருக்கிறது.

இதுகுறித்து 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு கூறும்போது, "ராட்சத பலூனில் தேசியக் கொடி இணைக்கப்பட்டு வானத்தில் பறக்கவிடப்பட்டது. இந்த பலூன் தற்போது பூமியில் இருந்து 30 கி.மீ.உயரத்தில் நிலை கொண்டிருக்கிறது. விண்வெளியில் தேசியக் கொடி கம்பீரமாக பறக்கிறது" என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டில் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பை ஸ்ரீமதி கேசன் தொடங்கினார். அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈஸா, ரஷ்யாவின் ஜிசிடிசி அமைப்புகளுடன் இணைந்து 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு செயல்படுகிறது. அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி மையத்தில் சுமார் 1,500 மாணவர்களுக்கு இந்த அமைப்பு பயிற்சி வழங்கியுள்ளது.

கடந்த 7-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஆசாதி சாட் செயற்கைக்கோளை, 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பை சேர்ந்த 750 மாணவ, மாணவியர் தயாரித்தனர். இந்திய பள்ளி மாணவ, மாணவியரிடம் விண்வெளி அறிவியல் ஆர்வத்தை இந்த அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

விண்வெளியில் தேசியக் கொடி

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி, 6 மாதங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியை முடித்துவிட்டு கடந்த மே மாதம் பூமி திரும்பினார்.

அவர் விண்வெளியில் இருந்தபோது இந்திய தேசியக் கொடியைபறக்கவிட்டு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் நேற்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இந்திய சுதந்திர தினத்தில் இந்திய வம்சாவளியினரை நினைவுகூருகிறேன். விண்வெளி மையத்தில் இருந்தபோது எனது தந்தையின் சொந்தஊரான ஹைதராபாத் ஒளிவெள்ளத்தில் மிதந்ததை பார்த்து மகிழ்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x