Published : 16 Aug 2022 05:26 AM
Last Updated : 16 Aug 2022 05:26 AM
புதுடெல்லி: பஞ்சாபின் லூதியானாவில் முஸ்லிம்கள் இல்லாத கிராமத்தில் உள்ள மசூதியை சீக்கியர்களும் இந்துக்களும் இணைந்து பராமரித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 14, 1947-ல் இந்தியாவில் இருந்து தனி நாடாகப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இந்திய பிரிவினை பல்வேறு வகைகளில் தாக்கங்களையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. அதற்கு ஒரு உதாரணமாக பஞ்சாபில் உள்ள மசூதி திகழ்கிறது. பஞ்சாபின் மலேர்கோட்லா மாவட்டத்தில் மட்டுமே தற்போது முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
பஞ்சாபின் மற்ற அனைத்து பகுதியிலும் இருந்த முஸ்லிம்கள் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். ஆனால், பிரிவினைக்கு முன்பாக பஞ்சாபில் முஸ்லிம்கள் கட்டிய மசூதிகள் இன்றும் உள்ளன.
ஆனால், மலேர்கோட்லாவை தவிர இதரப் பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகைகள் நடப்பதில்லை. சில மசூதிகள் இந்தியதொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பல மசூதிகள் பொழுதுபோக்கு இடங்களாகவும், பொது நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்களாகவும் மாறிவிட்டன. சில மசூதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் கட்டிடங்களாக்கப்பட்டு உள்ளன. அதற்கு ஆதாரமாக பல மசூதிகளின் மினார்கள் அந்தக் கட்டிடங்களின் மீது இன்றும் காண முடிகிறது.
ஆனால், தொழில் நகரமான லூதியானாவின் ஹிடன் பெட் எனும் கிராமத்தில் ஒரு பழங்கால மசூதி இன்றும் பாதுகாப்பாக உள்ளது. இக்கிராமத்தில் வாழ்ந்த சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் மொத்தமாக பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட்டன. அதனால், அந்த மசூதியை கிராமத்தில் உள்ள சீக்கியர்களும், இந்துக்களும் பராமரித்து வருகின்றனர். அன்றாடம் இந்த மசூதியை சுத்தம் செய்து அதில் மெழுகுவத்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
1920-ல் கட்டப்பட்டது
இதுகுறித்து ஹிடன் பெட்கிராமப் பஞ்சாயத்து தலைவர் குருபால் சிங் கூறும்போது, ‘‘இங்குள்ள குருத்வாரா, கோயிலுக்கு இணையாக இந்த மசூதியையும் பராமரித்து பாதுகாக்கிறோம். இங்கிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் நினைவாக மே மாதங்களில்லங்கர்களை நடத்தி அனைவருக்கும் உணவு அளிக்கிறோம். இந்த மசூதி 1920-ல் கட்டப்பட்ட பழமையானது என்பதால் இதை இந்திய தொல்லியல் துறையினர் எடுத்து பராமரிப்பது அவசியம்’’ என்றார்.
13 ஆண்டுகளாக பராமரிப்பு
பிரிவினைக்கு பிறகு இந்த மசூதியில் சூபி துறவி ஒருவர் தங்கியுள்ளார். அவர் எங்கிருந்து வந்தார் என்ற விவரங்கள் கிராமத்தினருக்கு தெரியவில்லை. எனினும், அவரை கிராம மக்கள் புனிதராகக் கருதி வணங்கி வந்தனர். அவர் கடந்த 2009-ல் காலமாகி விட்டார். அப்போது முதல் சுமார் 13 ஆண்டுகளாக இந்த மசூதியை ஹிடன் பெட் கிராம மக்களே பராமரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT