Published : 16 Aug 2022 12:12 AM
Last Updated : 16 Aug 2022 12:12 AM
புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி ஆற்றிய உரையில், "நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி, தலைமை தாங்கி, பல துறைகளில் முன்னுதாரணமாக உழைத்த பல மாநிலங்கள் நம் நாட்டில் உள்ளன. இது நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால் இன்றைய காலத்தின் தேவை, நமக்கு கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் போட்டியுடனான கூட்டுறவு கூட்டாட்சி தேவைப்படுகிறது. வளர்ச்சிக்கு போட்டி தேவை" என்று பேசினார்.
பிரதமரின் உரை இப்படியிருக்க, பாஜக ஆளாத மாநிலத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி முதல்வர்கள் தங்களின் சுதந்திர தின உரையில், வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு, உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சி தேசத்தின் அவசியத்தை வெளிப்படுத்தியவர்கள் மத்திய அரசின் நிதி பங்களிப்பை மறைமுகமாக சாடினர். பாஜக ஆளாத மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் சிலரின் சுதந்திர தின உரையின் தொகுப்பு இதோ...
கேரள முதல்வர் பினராயி விஜயன்: “கூட்டாட்சி என்பது இந்திய அரசியலமைப்பின் அடித்தளம் மற்றும் நாட்டின் இருப்புக்கான அடிப்படையாகும். குறிப்பாக நிதி விஷயங்களில் இதை மனதில் கொள்ள வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை வழங்கினால் மட்டுமே, அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியும். சமூகத்தின் பெரும் பகுதியினரின் முக்கியப் பிரச்னைகளான வறுமை மற்றும் வீட்டுவசதி இல்லாமைக்கு முடிவு கட்ட வேண்டும்.” என்று மத்திய அரசின் நிதி பங்களிப்பை மறைமுகமாக சாடினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்: மத்திய அரசுடன் சமீப காலமாக தீவிர மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் இவர், அதனை தனது உரையிலும் வெளிப்படுத்தினார். தனது உரையில், “மத்திய அரசு, கூட்டாட்சி மதிப்புகளை சீர்குலைக்கிறது. மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்துகிறது மற்றும் அதிகாரங்களை மையப்படுத்துகிறது. மத்திய அரசும் மாநிலங்களும் ஒன்றிணைந்து முன்னேற்றப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஆனால் தற்போது டெல்லியில் உள்ள மத்திய அரசு, கூட்டாட்சி மதிப்பை சீர்குலைக்கிறது. மத்திய அரசு, தான் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போல், மாநிலங்களை நிதி ரீதியாக நலிவடையச் செய்யும் சதிகளில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு வசூலிக்கும் வருவாயில் 41% மாநிலங்கள் பெற வேண்டியிருந்தாலும், பாஜக தலைமையிலான என்டிஏ அரசு மாநிலங்களின் பங்கைக் குறைக்க வரிகளுக்குப் பதிலாக செஸ் விதித்து மறைமுகமாக வருமானம் ஈட்டுகிறது. 2022-23ல் மாநிலங்களின் வருமானப் பங்கை 11.4% குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு 41% வழங்க வேண்டிய இடத்தில் 29.6% மட்டுமே வழங்கி மாநிலங்களுக்கு அநீதி இழைக்கிறது. இது போதாது என்பது போல், மத்திய அரசு பொருளாதாரத்தில் மாநிலங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கூட்டுறவுக் கூட்டாட்சியின் இலட்சியங்களைப் பற்றிப் பேசும் மத்திய அரசு உண்மையில் அதிகாரங்களை தன்னிடம் மட்டுமே குவித்துக்கொள்கிறது. மக்கள் நலனே அரசுகளின் முதன்மைப் பொறுப்பு. அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றாமல் மத்திய அரசு, நலத்திட்டங்களை இலவசங்கள் என்று சொல்லி அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று மத்திய அரசை வெளிப்படையாகவே சாடி பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: “தேசியக் கொடியின் நிறம், மூன்றாக இருந்தாலும் அது ஒரே அளவோடு ஒன்றிணைந்து காணப்படுகிறது. அது போல, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும். வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால், உள்புற ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். இதுதான் உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை, மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்.” என்று ஒன்றிய அரசு என்ற கோசத்தை மீண்டும் வலியுறுத்துவது போல் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு அமைந்தது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: “கல்வி மற்றும் மருத்துவமும் இலவசம் அல்ல, இவை இரண்டையும் அணுகினால் நாட்டின் வறுமையை ஒரே தலைமுறையில் ஒழிக்க முடியும்.அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகள் எப்படி பணக்காரர்கள் ஆயின? அவர்கள் தங்கள் குடிமக்களுக்கு நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்தனர். இதேபோன்று இந்தியாவையும் நம்பர் ஒன் நாடாக மாற்றுவோம். ஒவ்வொரு இந்தியனுக்கும் நல்ல மருத்துவம் மற்றும் கல்வி கிடைக்கும் போதுதான் மூவர்ணக் கொடி உயரப் பறக்கும்.” கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரசை குறிப்பிடும் வகையில் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் "ரெவ்டி கலாச்சாரம்" என்று பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சுதந்திர தின உரையில் இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான்: “சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், மாநிலத்தை மீண்டும் துடிப்பானதாக உருவாக்கவும் வேலையின்மை, ஊழல் மற்றும் வகுப்புவாதம் போன்ற சமூக நோய்களுக்கு எதிராக பஞ்சாப் மக்கள் போரை நடத்த வேண்டும். தியாகிகளின் சான்றிதழ்களை கேள்வி கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பகத்சிங், பி.ஆர்.அம்பேத்கர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்தடுத்த அரசாங்கங்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர், ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தனர்.” என்று தனது உரையில் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT