Published : 15 Aug 2022 09:19 AM
Last Updated : 15 Aug 2022 09:19 AM
புதுடெல்லி: ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள இரு பெரும் சவால்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்டுள்ளார்.
சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். தேசிய கீதம் ஒலிக்கப்பட மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் துவக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி அவர்களின் கனவின்படி இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்று பட்டியலிட்டார். பின்னர் தேச வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுப் பேசினார்.
பிரதமர் மோடி உரையிலிருந்து: "ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். ஊழலை ஒழிக்காமல் ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது. இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை. குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்" என்று பிரதமர் மோடி பேசினார்.
9வது முறையாக கொடியேற்றிய பிரதமர் மோடி: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் 'சாரே ஜஹான் சே அச்சா' பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT