Published : 15 Aug 2022 08:34 AM
Last Updated : 15 Aug 2022 08:34 AM

சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள்

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமான காலகட்டம் என்று கூறிய பிரதமர் மோடி அந்த 5 உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார்.

பிரதமர் மோடி உரையிலிருந்து: "ஜனநாயகத்தின் தாய் இந்தியா. இந்திய தேசம் கடந்த 75 ஆண்டுகள் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது. நாம் பல சாதனைகளைக் கண்டுள்ளோம். அதேவேளையில் இயற்கைப் பேரிடர், போர் எனப் பல சறுக்கல்களையும் எதிர்கொண்டுள்ளோம். நம் நாட்டின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் தன்மையே நம்மை வழிநடத்தும் சக்தியாக இருந்துள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று கோரினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பெருமையைக் கொண்டாடத் திரண்டுள்ளனர்" என்றார்.

5 உறுதிமொழிகள்: "நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக் கொள்வோம். கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது" என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

இந்த 5 உறுதிமொழிகளையும் ஏற்று நாட்டு மக்கள் பின்பற்றினால் இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும். நம் விடுதலை வீரர்களின் கனவு நிறைவேறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

9வது முறையாக கொடியேற்றிய பிரதமர் மோடி: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார்.

சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x