Published : 15 Aug 2022 08:10 AM
Last Updated : 15 Aug 2022 08:10 AM

புதிய இலக்குகளுடன் புதிய திசையில் பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக விடுதலைப் போரில் பழங்குடியினத் தலைவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார்.

முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

அப்போது அவர் நாட்டின் விடுதலைக்காக போராடிய விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக விடுதலைப் போரில் பழங்குடியினத் தலைவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார். பிர்சா முண்டா, அல்லூரி சீத்தாராம ராஜூ உள்ளிட்டோரைப் போற்றிப் பேசினார்.

அவர் உரையிலிருந்து: நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இந்தியர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இது புதிய திசையில், புதிய இலக்குகளுடன் பயணப்பட வேண்டிய தருணம்.

நம் நாட்டின் விடுதலைக்கான போராட்டம் நடந்தபோது ஒரே ஒரு நாள் கூட விடுதலைப் போராட்ட வீரர்கள் கொடுமையை அனுபவிக்காமல் இல்லை. இன்று தான் அவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நாள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொலைநோக்குப் பார்வையை அவர்களின் இந்தியாவிற்கான கனவை நாம் இன்று நினைவுகூர வேண்டும்.

நமது தேசியக் கொடியின் பெருமை நமது தேசத்தைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிர்கிறது. விடுதலைப் போரில் ஈடுபட்ட ராணி லக்‌ஷ்மி பாய், ஹஸ்ரத் மஹல், வேலு நாச்சியாரை நாம் நினைவு கூர்வோம்.

நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களை நாம் நினைவு கூர்வோம். அவர்களை சில காலம் தேசம் மறந்துவிட்டது. நாம் இப்போது அவர்களுக்கான உரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x