Published : 15 Aug 2022 12:11 AM
Last Updated : 15 Aug 2022 12:11 AM

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் தபால்தலை அவரது நினைவு தினத்தன்று வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படவுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மக்களுக்கு தேசியக் கொடிகளை அமைச்சர் முருகன் விநியோகம் செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கையும் அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 'இந்தியப் பிரிவினையின் தாக்கம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியும் அமைச்சர் முருகன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மூவண்ணக் கொடியை ஏற்றி பெருமைபடுத்தி, ஆதரவளித்து வருகின்றனர். தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், கொடி காத்த குமரன் என எண்ணற்றோர் நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வீடுதோறும் மூவண்ணக் கொடியை ஏற்றி மக்கள் ஆதரவளித்து வருகின்றனர். மேலும் வ.உ.சி 150-வது பிறந்த தினம், பாரதியார் நூற்றாண்டு விழா போன்றவற்றைக் கொண்டாடி வருகின்றோம். தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் இருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் அறியப்படாத வீரர்கள் உள்ளனர். அப்படி நாடு முழுவதும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 'சுராஜ்' என்ற பெயரில் நெடுந்தொடர் தூர்தர்ஷனில் நாளைமுதல் தொடர்ந்து 75 எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது‌. அதோடு அறியப்படாத வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20-ம் தேதி பாளையங்கோட்டையில் அவரது தபால்தலை வெளியிடப்படவுள்ளது என அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x