Published : 26 Oct 2016 11:08 AM
Last Updated : 26 Oct 2016 11:08 AM
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் அவருடைய அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அதிகப்படியான குடிபோதையால் மாணவர் இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக தெற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் ஈஷ்வர் சிங் கூறும்போது, "இறந்துபோன மாணவர் ஜே.ஆர்.பில்மோன் மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மேற்கு ஆசியா தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருந்தார். பிரம்மபுத்திரா விடுதியில் தங்கியிருந்தார். பில்மோனை கடந்த மூன்று நாட்களாகவே விடுதியில் சக மாணவர்கள் யாரும் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், அவரது அறையிலிருந்து துர்நாற்றம் வீசவே, எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நாங்கள் சென்றபோது அறை உள்ளே தாழிடப்பட்டிருந்தது.
மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்னிலையில் அறைக் கதவை உடைத்தோம். உள்ளே பில்மோன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். மாணவர் பில்மோன் அறையில் தற்கொலைக் குறிப்பு ஏதும் இல்லை.
பில்மோன் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் அதன் காரணமாகவே அவர் பலியாகியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. சக மாணவர்களிடம் பில்மோன் தொடர்பான தகவல்கள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment