Published : 12 Aug 2022 10:46 PM
Last Updated : 12 Aug 2022 10:46 PM

ரூ.20 கூடுதலாக வசூலித்த ரயில்வே: 22 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் வென்ற உ.பி வழக்கறிஞர்

மதுரா: பயண கட்டணத்தில் ரூ.20 கூடுதலாக வசூலித்த இந்திய ரயில்வேவுக்கு எதிரான வழக்கில் சுமார் 22 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் வழக்கறிஞர் ஒருவர். அது குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

கடந்த 1999 வாக்கில் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து மொராதாபாத் செல்லும் நோக்கில் இரண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார் வழக்கறிஞரான துக்கநாத் சதுர்வேதி. அவரது இரண்டு டிக்கெட்டுக்குமான பயண கட்டணம் ரூ.70. அதற்கான ரசீதும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் அப்போது ரூ.90 வசூலிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் தனக்கு சேர வேண்டிய 20 ரூபாய்க்காக அங்கிருந்த ஊழியர்களிடம் முறையிட்டும் அது கிடைக்கவில்லை என தெரிகிறது.

அவர் பயணம் செய்த அந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தூரம் சுமார் 300 கிலோமீட்டர் (185 மைல்கள்) தான். ஆனால் தனக்கான நீதி வேண்டி மதுரா நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் நடத்திய சட்டப் போராட்ட வழக்கின் பயண தூரம் நீதிமன்றத்தில் 120 விசாரணைகளை சந்தித்துள்ளது. இந்த வழக்கை 20 ஆண்டு காலம், 5 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். இந்த மாதம்தான் அவருக்கான இழப்பீடை அறிவித்துள்ளது நீதிமன்றம்.

66 வயதான சதுர்வேதிக்கு சேர வேண்டிய 20 ரூபாய், கூடுதலாக அதற்கு ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டி மற்றும் ரூ.15 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இந்திய நீதித்துறையின் மந்தமான செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அவர் வழக்கறிஞர் என்றாலும் அவருக்கான் நீதி கிடைக்க 20 ஆண்டு காலம் பிடித்துள்ளது. அதோடு பல மணி நேர உழைப்பு மற்றும் 20 ஆயிரம் ரூபாய் வரை வழக்கு விசாரணைக்காக அவர் செலவும் செய்துள்ளாராம். ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரும் இந்த போராட்டத்தை கைவிடுமாறு சொல்லியுள்ளனர். இருந்தும் அதனை அவர் தொடர்ந்துள்ளார்.

“இது பணத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல. இது எனது உரிமைக்கானது. இந்த நாட்டின் குடிமகனாக நான் முறைகேட்டுக்கு எதிராக கேள்வி கேட்டேன். காரணமே இல்லாமல் இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது உண்டு. அதனால் நான் சில நேரங்களில் விரக்தி அடைந்துள்ளேன்.

ஆனால் நான் ஒரு வழக்கறிஞர். அதனால் இந்த வழக்கில் இறுதி வரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இந்த போராட்டம்” என சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x