Published : 12 Aug 2022 07:03 AM
Last Updated : 12 Aug 2022 07:03 AM
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து வந்த காதலியை, பிஹார் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் பகதூர்பூர் பகுதியை சேர்ந்தவர் அகமது (30). இவர் சவுதியில் பணியாற்றுகிறார். இவருக்கும் பாகிஸ்தான் பைசலாபாத்தை சேர்ந்த கதியா நூர் (26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறி ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளனர்.
அதற்கு ஹைதராபாத்தில் வசிக்கும் சகோதரர் முகமதுவின் உதவியை நாடினார் அகமது. பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியா வருவது என இவர்கள் திட்டம் தீட்டினர். இதற்காக நேபாளத்தில் உள்ள அகமதுவின் நண்பர் ஜீவனின் உதவியை நாடினார்கள்.
அவரும் உதவி செய்ய சம்மதித்தார். இவர்களின் திட்டப்படி, கடந்த 8-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வந்தார் கதியா நூர். அங்கு ஜீவனை சந்தித்தார். இருவரும் பிஹார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அப்போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், கதியா நூரின் ஆதார் அட்டையை சோதனையிட்டதில், அது போலி என தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, திருமணம் செய்து கொள்ள ஹைதராபாத் செல்லவே போலி ஆதார் அட்டை தயாரித்து வந்ததாக கதியா நூர் ஒப்புக்கொண்டார்.
எனினும், சந்தேகம் அடைந்த உளவுத் துறையினர், இவர்களின் பின்னணியில் தீவிரவாத இயக்கம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் கதியா நூர், ஜீவன் மற்றும் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT