Published : 12 Aug 2022 05:47 AM
Last Updated : 12 Aug 2022 05:47 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க பாஜக மும்முரமாக செயலாற்றி வருகிறது.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து அங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியே 2 முறை ஆட்சியை பிடித்து சந்திரசேகர ராவ் முதல்வரானார். இம்முறை ஆளும் கட்சிமீது உள்ள அதிருப்தி, பல திட்டங்களை அமல்படுத்தாதது, வேலை வாய்ப்பை உருவாக்கி தராதது, 2 படுக்கை அறை இலவச வீடு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாதது போன்ற பல குற்றச்சாட்டுகள் தெலங்கானா அரசு மீது உள்ளன. இவற்றை முன்வைத்து மக்களிடையே வாக்கு சேகரிக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 2 இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று, ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஹைதராபாத் நகரில் 46 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்று, 2-வது பெரிய கட்சியாக உருவானது.
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின்கட்கரி உள்ளிட்டோர் அடிக்கடி ஹைதராபாத்துக்கு வந்து பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு அங்குள்ள தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை பேச விடாமல், மோடி.. மோடி.. என கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் பிரதமர் மோடி பேச்சை தொடராமல் சிறிது நேரம் சிரித்துக் கொண்டே மவுனமாக இருந்துவிட்டார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும், தெலங்கானாவை நாங்கள் தான் உருவாக்கினோம். எனவே, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனக் கோரி தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெறவுள்ள தேர்தலில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டுமென பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நெருங்கிய நண்பரும் அரசியல் ஆலோசகருமான சுனில் பன்சால் களம் இறங்க உள்ளார். இவர் உத்தர பிரதேசத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பாஜக காலூன்ற பெரும் மூளையாக செயல்பட்டவர். ஆதலால், பாஜக தொடர்ந்து அங்கு 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக தேசிய தலைவராக அமித் ஷா இருந்தபோது, ஆர்எஸ்எஸ்ஸில் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த சுனில் பன்சாலை, உத்தர பிரதேச பாஜக பொறுப்பாளராக நியமித்தார். அங்கு அவர் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலம் பொருந்திய கட்சியாக மாற்றினார். அதன் பின்னர் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
சுனில் பன்சாலுக்கு பாஜக.வின் பலம், பலவீனம் இரண்டும் தெரியும். ஆதலால்தான் அவர் துல்லியமாக தேர்தல் நேரத்தில் செயல்பட்டு, பாஜக.வுக்கு வெற்றிகளை பெற்றுத் தருகிறார். தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோமட்டிரெட்டி ராஜ்கோபால் ரெட்டியை பாஜக.வில் இணைய வைத்துள்ளார் சுனில் பன்சால். இது அமித் ஷாவுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ‘பாஜக ஆகர்ஷ்’ என்ற பெயரால் வெளிக்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பலர் பாஜக.வில் இணைக்கப்பட்டு வருகின்றனர். இதுவே சுனில் பன்சாலின் ராஜதந்திரம்.
இது தெலங்கானாவில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தந்திரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை பெற்று தரும் என்று பாஜக.வினர் நம்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT