Last Updated : 11 Aug, 2022 05:46 AM

4  

Published : 11 Aug 2022 05:46 AM
Last Updated : 11 Aug 2022 05:46 AM

என்டிஏ.வில் இருந்து ஜேடியு விலகியதால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு சிக்கல்

புதுடெல்லி: பிஹார் முதல்வரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து (என்டிஏ) விலகி விட்டது. இதனால், மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போதைய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 237. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் 100, சுயேச்சை 1 மற்றும் நியமன உறுப்பினர்கள் 4 சேர்த்து 115 உறுப்பினர்கள் இருந்தனர்.

தற்போது, மாநிலங்களவையில் 5 உறுப்பினர்கள் கொண்ட நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு, என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. இதனால், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவு எண்ணிக்கை 110 ஆக குறைந்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக திரிபுராவில் 1, ஜம்மு காஷ்மீரின் நியமன உறுப்பினர்கள் 3, மாநிலங்களவையில் புதிதாக சேர உள்ளனர். அவர்களையும் சேர்த்தால் என்டிஏ உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆக உயரும். எனினும், மாநிலங்களவையின் பெரும்பான்மைக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து விடும். எனவே, மேலும் 7 எம்.பி.க்களின் ஆதரவை என்டிஏ அரசு வெளியில் இருந்து பெற வேண்டிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மசோதாக்களை நிறைவேற்ற கூட்டணிக்கு வெளியே தலா 9 உறுப்பினர்கள் கொண்ட ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டி வரும். இந்த 2 கட்சிகளுடன் மாயாவதியின் பிஎஸ்பி, பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவு குடியரசுத் தலைவர் தேர்தலில் என்டிஏ.வுக்கு கிடைத்தன.

இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராக ஜேடியு.வின் ஹரிவன்ஷ் தொடர்கிறார். இவரது கட்சி ஜேடியு, என்டிஏ.வில் இருந்து விலகிய நிலையில் அப்பதவியில் ஹரிவன்ஷ் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் என்டிஏ.வில் இருந்து விலகிய 3-வது கட்சியாக ஜேடியு உள்ளது.

இதற்கு முன்பு பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம், பிறகு மகராஷ்டிராவின் சிவசேனாவிலகின. மேலும் 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும் விலகியது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x