Published : 11 Aug 2022 06:24 AM
Last Updated : 11 Aug 2022 06:24 AM
பானிப்பட்: அரசியல் சுயநலத்தாலும், குறுக்குவழி அரசியலாலும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஹரியாணா மாநிலம் பானிப்பட் நகரில் ரூ.900 கோடி மதிப்பில் 2-வது தலைமுறைக்கான எத்தனால் உற்பத்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியிலிருந்து காணொலி வசதி மூலம் இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நம்முடைய தேசத்தில் இயற்கையை வழிபடும் கலாச்சாரம் உள்ளது. ஆதலால், பானிப்பட்டில் உருவாக்கப்பட்டுள்ள பயோ-எரிபொருள் ஆலையால் இனிவரும் காலங்களில் இயற்கை பாதுகாக்கப்படும். இதை நமது விவசாயிகள் சிறப்பாக புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். பயோ-எரிபொருளை நாம் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படும்.
பயோ-எரிபொருள் ஆலை பயன்பாட்டுக்கு வந்தபின், வயல்களில் அறுவடைக்குப் பின்னர் வரும் வைக்கோலை இங்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் எத்தனால் உற்பத்தி 40 கோடி லிட்டராக இருந்தது. இன்று 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
2014-ம் ஆண்டு வரை 14 கோடி சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு மட்டுமே இருந்தது. தற்போது நாடு முழுவதும் 31 கோடி சமையல்காஸ் இணைப்புகள் உள்ளன.
அரசியல் சுயநலத்துக்காக குறுக்குவழிகளைக் கையாண்டு பிரச்சினைகளைத் தவிர்க்கும் போக்கைக் கொண்டவர்களால் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்க முடியாது.
இலவசத் திட்ட அறிவிப்புகள் நாடு தன்னிறைவு அடைவதைத் தடுக்கும், நேர்மையான வரி செலுத்துவோர் மீதான சுமையை அதிகரிக்கும். மேலும், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கும்.
குறுக்குவழிகளைக் கடைப்பிடிப்பவர்கள் சிறிது நேரம் கைதட்டல் பெறலாம். அரசியல் ஆதாயமும் பெறலாம், ஆனால் அது சிக்கலைத் தீர்க்காது. குறுக்கு வழியைக் கையாண்டால் நிச்சயமாக பிரச்சினை ஏற்படும். எங்கள் அரசு குறுக்குவழிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஈடுபட்டுள்ளது.
நாட்டில் சிலர் கறுப்பு ஆடை அணிந்து கொண்டு கடந்த 5ம் தேதி சூனியத்தையும், எதிர்மறையான சிந்தனைகளையும் பிரச்சாரம் செய்வதை பார்த்தோம். மூடநம்பிக்கைகளையும், மாயதந்திரங் களையும் பிரச்சாரம் செய்யும் முயற்சியும் நடந்தது. கறுப்பு ஆடை அணிவதால் மட்டும் தங்களுடைய விரக்தியை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த 5ம்தேதி காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வு,பணவீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு கறுப்பு ஆடை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். அதை பிரதமர் மோடி தனது உரையின்போது சூசகமாக குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் காணொலி முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT