Published : 11 Aug 2022 05:36 AM
Last Updated : 11 Aug 2022 05:36 AM
புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில் ஏற்கெனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது.
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப் பூசியை 2 டோஸ்கள் எடுத்துக் கொண்டார்களோ அதையை பூஸ்டர் டோஸாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பயலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் கார்பிவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை, ஏற்கெனவே 2 டோஸ் கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாறுபட்ட தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவது நாட்டில் இதுவே முதல் முறை.கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு2-வது டோஸ் செலுத்தப்பட்ட நாளில்இருந்து 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களுக்குப் பிறகு இதனை செலுத்திக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக தற்போது 12 முதல்14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கார்பிவாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஏற்கெனவே 2 டோஸ் கோவாக் சின் அல்லது கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட 18 - 80 வயது தன்னார்வலர்களுக்கு பூஸ்டர் டோஸாகசெலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
16,047 பேருக்கு பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,047 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட (12,751) 26 சதவீதம் அதிகமாகும். நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,41,90,697 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,26,826 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 1.19 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 19,539 பேர் குணம் அடைந்துள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,35,35,610 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,28,261 ஆக மேலும் குறைந்துள்ளது. கரோனா தொற்றை கண்டறிய இதுவரை 87.80 கோடிக்கும்மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 207 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT