Published : 10 Aug 2022 08:59 PM
Last Updated : 10 Aug 2022 08:59 PM
புதுடெல்லி: “நமது மூவண்ணக் கொடி என்பது கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்தின் அர்ப்பணிப்பு, எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பு” என்று பிரதமர் மோடி பேசினார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் புதன்கிழமை மூவண்ணக்கொடி பேரணி நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “அனைவருக்கும், சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவின் வாழ்த்துகள். இன்னும் சில தினங்களில், இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. நாடு முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் மூவண்ணக்கொடி ஏற்றியிருக்கும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க சுதந்திரதின கொண்டாட்டத்துக்கு நாம் அனைவரும் தயாராகி வருகிறோம்.
குஜராத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகம் நிறைந்துள்ள இந்த வேளையில் அதன் பெருமையை சூரத் மேலும் அதிகரித்துள்ளது இன்று நாடு முழுவதும் சூரத்தின் மீது கவனம் செலுத்துகிறது. ஒருவகையில், சூரத்தின் மூவண்ணக் கொடி பேரணியில், ஒரு சிறிய இந்தியாவை காண முடிகிறது. சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர்.
மூவண்ணக் கொடியின் உண்மையான ஒற்றுமை உணர்வை சூரத் வெளிப்படுத்தியிருக்கிறது. சூரத், தனது தொழில்கள் மற்றும் வணிகம் மூலம் உலகம் முழுவதும் முத்திரை பதித்திருந்தாலும், இன்று மூவண்ணக் கொடி யாத்திரை வாயிலாக உலக மக்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும்
மூவண்ணக்கொடி பேரணியில், தமது சுதந்திரப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்திய சூரத் மக்களுக்கு எனது பாராட்டுகள். ஆடை விற்பனை செய்யும் ஒருவர், கடைக்காரர் ஒருவர், தறி நெய்யும் கைவினைக் கலைஞர், போக்குவரத்துத் துறையை சேர்ந்தவர் என அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதனை மாபெரும் நிகழ்வாக மாற்றிய சூரத்தை சேர்ந்த ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரின் முயற்சிகளுக்கு பாராட்டுகள். இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பாட்டீலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசியக் கொடியே நாட்டின் ஜவுளித்தொழில். நமது நாட்டின் காதி மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளது. இந்த துறையில் தன்னிறைவு பெற்ற, இந்தியாவுக்கான அடிப்படையை சூரத் எப்போதும் தயார் செய்து வருகிறது. குஜராத், சுதந்திரப் போராட்டத்தை பாபு உருவில் வழிநடத்தியது. சுதந்திரத்திற்கு பின்னர் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு அடித்தளமிட்ட இரும்பு மனிதர் சர்தார் படேல் போன்ற மாவீரர்களை வழங்கியது. பர்தோலி இயக்கம் மற்றும் தண்டி யாத்திரை வாயிலாக வழங்கிய செய்தி மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது.
இந்தியாவின் மூவண்ணக் கொடியில் மூன்று நிறங்கள் மட்டும் இல்லை. அது நமது கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்திற்கான நமது அர்ப்பணிப்பு, எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பு. நமது மூவண்ணக்கொடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் சின்னம்.
சுதந்திரத்தில் ஈடுபட்ட போராளிகள், மூவண்ணக் கொடியில் நாட்டின் எதிர்காலத்தையும், கனவையும் கண்டனர். எந்த வகையிலும் தலைவணங்க விடவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய இந்தியாவுக்கான பயணத்தை தொடங்கும்போது, மூவண்ணக் கொடி இந்தியாவின் ஒற்றுமையையும், உணர்வையும் மீண்டும் பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் பேசினார்.
Addressing Tiranga Yatra in Surat, Gujarat. https://t.co/Y7mmK9jt8Y
— Narendra Modi (@narendramodi) August 10, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT