Published : 10 Aug 2022 03:56 PM
Last Updated : 10 Aug 2022 03:56 PM
பாட்னா: “2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பிஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பிஹாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்த பின்னர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோத்துள்ளார் நிதிஷ் குமார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் இன்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதிஷ் குமார், "2014-ல் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். 2024 தேர்தலிலும் அவர்கள் வெற்றி பெறுவார்களா? 2024 தேர்தல் பற்றி இனி அவர்தான் (பிரதமர் மோடி) கவலைப்பட வேண்டும். 2024-ல் மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். எனக்கு பிரதமர் வேட்பாளராக களம் இறங்கும் ஆசையில்லை. 2020 தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வராகக் கூட விரும்பவில்லை. கட்சியின் நிர்பந்தத்தால் முதல்வரானேன்" என்று பேசினார்.
பாஜக புறக்கணிப்பு: ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில் பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை. பிஹார் சட்டப்பேரவையில் 77 எம்எல்ஏக்களுடன் இரண்டாவது பலம் வாய்ந்த கட்சியாகத் திகழ்கிறது பாஜக. இந்நிலையில், இன்றைய பதவியேற்பு விழாவினை அவர்கள் புறக்கணித்தனர். ஆனால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், “எங்களுக்கு முறைப்படி அழைப்புவிடுக்கப்படவில்லை. அதனால், பதவியேற்பு விழாவிற்குச் செல்லவில்லை” என்றார். மேலும், “நிதிஷ்குமாருக்கு பிஹார் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றும் அவர் கூறினார்.
வெர்ஷன் 2.0: வரும் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டே பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். இந்நிலையில் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி இரண்டாவது வெர்ஷன் கூட்டணியில் ஆட்சியை அமைத்துள்ளார். கூட்டணிகளை மாற்றிக் கொண்டே இருப்பதால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் தயக்கம் இருக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT