Last Updated : 25 Oct, 2016 06:07 PM

 

Published : 25 Oct 2016 06:07 PM
Last Updated : 25 Oct 2016 06:07 PM

கட்சியிலும் குடும்பத்திலும் திரும்பியது ஒற்றுமை: முலாயம் மகிழ்ச்சி

சமாஜ்வாதி கட்சி மற்றும் குடும்பத்துக்குள் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது என அக்கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஷிவ்பால் யாதவ் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவ் ஆகியோருக்கு இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திங்களன்று லக்னோவில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் முலாயம் சிங் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் கூடியது. அப்போது அமர்சிங் மற்றும் ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவாக முலாயம் சிங் பேசினார்.

புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டதாக அகிலேஷ் மீது குற்றம்சாட்டிய ஷிவ்பால் அவரிடமிருந்த மைக்கையும் பிடுங்கினார். இதனால் அகிலேஷ், முலாயம் சிங் மற்றும் ஷிவ்பால் யாதவுக்கு இடையே நேரடியாக கடும் வாக்குவாதம் மூண்டது. பெரும் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

எனினும் கட்சியிலிருந்து அகிலேஷை நீக்கும் எண்ணம் இல்லை என முலாயம் சிங் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதேசமயம் அன்றிரவு எதிர்பாராத திருப்பமாக அகிலேஷை அவரது இல்லத்தில் ஷிவ்பால் யாதவ் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் ஒரே காரில் கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங்கின் வீட்டுக்கு சென்று, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று (செவ்வாய்) நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:

தற்போது கட்சியிலும், குடும்பத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது. அனைத்து தொண்டர்களிடையேயும் ஒற்றுமை நிலவுகிறது. கட்சித் தலைவர்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடோ, மனவேற்றுமையோ இல்லை. ஷிவ்பாலுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கும் முடிவை, முதல்வர் அகிலேஷிடமே விட்டுவிடுகிறேன். தேர்தலுக்கு சிறிது காலமே இருக்கிறது. இந்தச் சூழலில் நான் முதல்வராக அமர வேண்டும் என்று பரிசீலிப்பது சரியாக இருக்காது.

சமாஜ்வாதி ஜனநாயக கட்சி. தேர்தலில் முதலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெறுவது தான் முக்கியம். அதன்பின் புதிய எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வோம். தற்போதைக்கு அகிலேஷ் தான் முதல்வர். இதில் யாருக்காவது பிரச்சினை இருக்கிறதா?

இவ்வாறு அவர் கூறினார். லக்னோவில் நடந்த இந்த செய்தியாளர்களின் கூட்டத்தில் முலாயம் சிங்குடன் அவரது சகோதரரும், கட்சியின் மாநிலத் தலைவருமான ஷிவ்பால் யாதவ் மற்றும் பதவி நீக்கப்பட்ட மூன்று அமைச்சர்களும் கலந்துகொண்டனர். முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்காததால் கட்சித் தொண்டர்கள் இடையே மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x