Published : 08 Aug 2022 06:36 AM
Last Updated : 08 Aug 2022 06:36 AM
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். இவர் வெல்வது உறுதி என்பது தேர்தலுக்கு முன்பே அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எனினும், எதிர்பார்த்தது போலவே தன்கர் 528 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 74 சதவீதமாகும். மார்கரெட் ஆல்வா வெறும் 182 வாக்குகள் (26 சதவீதம்) பெற்றார்.
இது எதிர்க்கட்சி வேட்பாளருக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட குறைவு. கடந்த முறை நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் (68 சதவீதம்) பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகள் (32 சதவீதம்) கிடைத்தன. அதை விட தற்போது எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 6 சதவீத வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா தேர்வு செய்யப்படுவது குறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அத்துடன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தது. அதேபோல் ஜெகதீப் தன்கர் விவசாயி என்று கூறிய பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம், பாஜக கூட்டணி கேட்காமலேயே தனது ஆதரவை அளித்தது. இதுபோன்ற பல காரணங்களை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகள் தம் சுய லாபங்களை தேடுவது வெளிப்படையாகத் தெரிந்தது.
இதுகுறித்து, மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பதிவில், ‘‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்ட குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சிறந்த வாய்ப்பாக இருந்தது. கடந்த காலங்களை மறந்து எதிர்க்கட்சிகள் தமக்குள் விசுவாசத்தை வளர்த்திருக்கலாம். ஆனால், எதிர்பாராதவிதமாக பல எதிர்க்கட்சிகளே நேரடியாகவும், மறைமுகமாகவும் பாஜக.வுக்கு ஆதரவளித்தன. இதன்மூலம், எதிர்க்கட்சிகளின் ஒன்று சேரும் திட்டம் பலன் தரவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து நடந்து முடிந்த இந்த 2 தேர்தல்களிலும், தமது வேட்பாளர்களின் தோல்வியை எதிர்க்கட்சிகள் நன்கு அறிந்திருந் தன. எனினும், இதில் தங்களது ஒற்றுமையை காட்டி குறைந்த வாக்கு வித்தியாசத்தின் மூலம் பாஜக.வை அச்சுறுத்த நினைத்தன. ஆனால், 2 தேர்தல்களின் முடிவு களால் எதிர்க்கட்சிகளே மிரண்டு நிற்கும் நிலை உருவாகி விட்டது. இச்சூழலில், 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைப்பது சாத்தியமல்ல என்பது தெரிகிறது. மக்களவை தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் சுய லாபத்துக்காக தனித்து போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன.
மேலும், மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்டது போல்,ஜார்க்கண்டிலும் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா குறி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதேபோல தமிழகம், பிஹார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் 3-வது முறையாக பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்படுவதும் ஆளும் கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளது.
இதுவரை, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் மற்றும் திரிணமூல் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. இக்கட்சிகளுக்கு முன்பாக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைப்பில் ஆர்வம் காட்டிய இடதுசாரிகள் அமைதி காப்பது போல் உள்ளது. எனவே, மீதம் உள்ள பிராந்திய, மாநிலக் கட்சிகள் முன்னெடுப்பால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 2024 மக்களவை தேர்தலில் சந்திப்பது பெரும் கேள்விகுறிதான்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT