Published : 06 Aug 2022 08:36 PM
Last Updated : 06 Aug 2022 08:36 PM

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கர்

புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் வாரத்தில் அவர் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்பார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார்.

குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் பிரதமர் மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. மாநிலங்களைவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 233 உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள், மக்களை உறுப்பினர்கள் என மொத்தமுள்ள 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதில் 8 இடங்கள் காலியாக உள்ளன. திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த 36 எம்பிக்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. பாஜக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் வாக்களித்தாலே போதும், அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற நிலை இருந்தது.

எதிர்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ஸ்டாலின் தலைமையிலான திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்திருந்தனர்.

மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 780 வாக்காளர்களில், 725 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது மொத்தம், 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.

பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. பதிவான வாக்குகளில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 14 வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். இவர் வரும் வாரத்தில் பதவி ஏற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிக்கின்றன.

ஜெகதீப் தன்வர் யார்? - ராஜஸ்தான் மாநிலம் கிதானா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர் சில காலம் உச்ச நீதிமன்றத்தில் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர் 1989-ம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுடன் இவருக்கு மோதல் போக்கே நிலவியது. இதற்கிடையில், 14-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

ஜெகதீப் தன்கரைப் பொறுத்தமட்டில், மோடி வேறு அரசியல் அணுகுமுறையை பின்பற்றியுள்ளார். மோடி அரசு எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மோடி 3.0 என்று வர்ணிக்கப்படும் இந்த காலக் கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையை வழிநடத்த வலுவான தலைவர் ஒருவர் தேவை என்ற அடிப்படையில் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x