Published : 06 Aug 2022 05:37 PM
Last Updated : 06 Aug 2022 05:37 PM
திருவனந்தபுரம்: ராமாயணம் தொடர்பாக நடந்த வினாடி - வினா போட்டியில் வென்ற கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் இருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கேரளாவில் வல்லன்சேரியில் உள்ள இஸ்லாமிய கலைக் கல்லூரியில் முகமத் ஜபிர், முகமத் பசித் ஆகியோர் பயின்று வருகிறார்கள். டிசி புத்தகம் சார்பாக ஆன்லைனில் நடந்த ராமாயணம் வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற ஐவரில் ஜபிரும், பசித்தும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ஜபிருக்கு தன்னுடைய கல்லூரி ஜூனியரான பசித் பங்கேற்றது தெரியவில்லை. வெற்றியாளர்களை அறிவித்த பின்னரே இருவரும் போட்டியில் கலந்து கொண்டிருப்பது ஜபிருக்கு தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில், ராமாயண கேள்வி - பதில் போட்டியில் இஸ்லாமிய மாணவர்கள் இருவரும் வெற்றி பெற்றிருப்பது அவர்களது குடும்பதாரை மட்டுமல்லாது அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
வெற்றி பெற்றது குறித்து பசித் கூறியது: “நாங்கள் போட்டியில் தன்னம்பிக்கையாகவே இருந்தோம். ஏனெனில் எங்கள் கல்லூரி பாடப்பிரிவில் ராமாயணமும் இருந்தது. நாங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களான இந்து மதம், புத்த மதம், சிக்கிய மதம், ஜெயின் மதங்களை பற்றி படித்துள்ளோம். மேலும் கிறிஸ்துவம், யூத மதம் குறித்தும் படித்துள்ளோம்.
அனைத்து இந்தியர்களும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை படிக்க வேண்டும். இவை இரண்டும் நம் நாட்டின் மிகப்பெரிய இதிகாசங்கள். மற்ற மதங்களின் மீதான மரியாதையை அதிகரிக்க வாசிப்பு நிச்சயம் உதவும்" என்றனர்.
பின்னர் ஜபிர் கூறும்போது, “அனைத்து மதங்களும் அமைதியையே வலியுறுத்துகின்றன. ராமாயணத்தைப் பாருங்கள். அறத்தின் உருவான ராமனின் கதையை இது கூறுகிறது. ராமாயணம் சகிப்புத்தன்மை, பொறுமை, அமைதி, சகோதர அன்பு மற்றும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது” என்றார்.
மத வேறுபாடுகளை மறந்து இஸ்லாமிய மாணவர்கள் இருவரும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இருப்பது இந்தியாவின் மதசார்பின்மையை மீண்டும் உறுதி செய்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT