Published : 05 Aug 2022 04:10 PM
Last Updated : 05 Aug 2022 04:10 PM

சிறப்பு ரயில் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக: மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்

புதுடெல்லி: "சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். நூறு சதவீத ரயில் சேவையை உடனடியாகக் கொண்டுவர வேண்டும்" என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பின் கீழ் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசியது: “இந்திய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது ரயில்வே துறை. அவர்கள் தங்களின் பயணத்திற்காக பெரும்பாலும் சார்ந்திருப்பது ரயில்களைத்தான். கரோனா காலத்தில் வழக்கமான பல ரயில்களை ரத்து செய்த ரயில்வே துறை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிவந்த கட்டண சலுகையையும் நிறுத்திவைத்தது.

அத்துடன் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 53 பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்து கட்டண சலுகையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில் சில பிரிவினருக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சலுகை பறிக்கப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் இச்சலுகையை மீண்டும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா காலத்திற்குப் பிறகு இன்னும் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படாதபோது, தற்போது ஓடும் ரயில்களில் 70 சதவிகித ரயில்கள் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் குறைந்த தூரத்திற்கு பயணிக்கும் போது கூட ஏழை மக்களுக்கு இது பெருத்த சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே, 100 சதவீத ரயில் சேவையை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தை நிறுத்த வேண்டும். குறைந்தது கட்டண உயர்வை கணிசமாகக் குறைக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x