Published : 04 Aug 2022 03:45 PM
Last Updated : 04 Aug 2022 03:45 PM
புதுடெல்லி: “நாட்டில் இளம் வயது ஆண்களும், பெண்களும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்திருப்பதாக வரும் தகவல்கள் உண்மைதானா? அதைத் தடுக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் என்ன?” என்று மாநிலங்களவையில் திமுக. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், "விபத்து மற்றும் தற்கொலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் விவரங்களைச் சேகரித்து ஆண்டு தோறும் வெளியிடுகிறது. 2020-ஆம் ஆண்டுவரை இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண், பெண், இளம் வயதினர், முதியவர்கள் என்று பிரித்துப் பார்த்து விவரங்களை வெளியிடுவதில்லை. எந்த வயதினர் அதிகமாக தற்கொலை செய்கிறார்கள் என்ற விவரமும் சேகரிக்கப்படுவதில்லை. ஆனாலும் கூட, தற்கொலைக்கு பெரும்பாலும் காரணமாக குடும்பத் தகராறு, திருமணத்தை தாண்டிய உறவுகள், காதல் பிரச்சினை, திருமணம் தொடர்பான தகராறு, விவாகரத்து, ஏழ்மை, கடன் தொல்லை, சொத்துத் தகராறு, உடல்நலமின்மை என பல்வேறு பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு வந்திருக்கின்றன.
பெரும்பாலான தற்கொலைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம்தான் என்பதால், மாவட்ட அளவில் மனநல சிகிச்சை அளிக்கும் மையங்களை அமைத்து அதன் உட்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதி உதவியோடு, நாடு முழுக்க 704 மாவட்டங்களில் இத்தகைய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற வசதிகள் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு மனநல ஆலோசனை பெற விரும்பும் புற நோயாளிகளுக்கு அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர் சிகிச்சை, இலவச மருந்துகள், ஆலோசனை, ஆம்புலன்ஸ் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.
தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் ஆலோசனைகள் வழங்குவது, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு தீர்வு காண்பது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மன நல சிகிச்சை தேவைப்படுவோருக்கு தொடர் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தற்கொலைகளைத் தடுக்கும் விஷயத்தில் தேவையான ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகளை இந்த மாவட்ட அளவிலான மனநல மையங்கள் மேற்கொள்கின்றன.
நாளிதழ்கள், ரேடியோ, தெருக்கூத்து, சுவர் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலமாக தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் விழிப்புணர்வுப் பணிகளை மாநில அரசுகள் இந்த மையங்கள் மூலமாக மேற்கொள்கின்றன.
அத்துடன், பள்ளி மாணவ மாணவிகளை கண்காணித்து, அவர்களுக்கு மனநல ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மாவட்ட மனநல மையங்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் வகுப்பு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த முயற்சிகளில் பெற்றோர் மற்றும் சமுதாயத் தலைவர்களையும் இணைத்து, வளர் இளம்பருவத்தினருக்கு தேவையான முன்னெடுப்புகளைச் செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT