Published : 25 Oct 2016 08:19 AM
Last Updated : 25 Oct 2016 08:19 AM

சமாஜ்வாதி கட்சிக்குள் வாரிசு அரசியல் போர் முற்றுகிறது: அகிலேஷ் - முலாயம் நேருக்கு நேர் மோதல்

பாதியில் முடிவடைந்த லக்னோ கூட்டம்

வாரிசு அரசியல் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் லக்னோவில் நேற்று நடந்த சமாஜ்வாதி உயர்நிலைக் கூட்டத்தின்போது கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனான உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ் வாதி கட்சிக்குள் வாரிசு அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால், அவரது ஆதரவாளர்கள் சதாப் பாத்திமா, நராத் ராய், ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை நேற்று முன்தினம் முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கினார். மூத்தத் தலைவர் அமர்சிங்கின் ஆதர வாளரான நடிகை ஜெயப்பிரதாவின் மாநிலத் திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பதவியையும் அகிலேஷ் பறித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கட்சித் தலைவர் முலாயம் சிங், அகிலேஷின் தீவிர ஆதரவாளரான ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டு களுக்கு நீக்க உத்தரவிட்டார். வாரிசு அரசியலால் ஏற்பட்ட இந்த உட்கட்சி பூசலால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே சமாஜ்வாதி கட்சி இரண்டாக உடையக்கூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் உயர்நிலைக் கூட்டம் லக்னோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அமர்சிங் மற்றும் ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவாக முலாயம் சிங் பேசியதால், ஆவேசமடைந்த அகிலேஷ் யாதவ் அவருடன் நேருக்கு நேர் உரத்தக் குரலில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கட்சிக்குள் மோதல் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்ற முலாயம் சிங்கின் அறிவுரையையும் மதிக் காமல் அங்கு திரண்டிருந்த அகிலேஷ் மற்றும் ஷிவ்பால் ஆதர வாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து முடிவு ஏதும் எடுக்கப் படாமல் பாதி யிலேயே கூட்டம் முடிந்தது.முன்னதாக இக்கூட்டத்தில் முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் பேசினார்.

அப்போது ஷிவ்பாலுடன், அகிலேஷ் யாதவ் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அகிலேஷிடமிருந்த மைக்கைப் பிடுங்கி அவரது ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஷிவ்பால், ‘‘முலாயம் சிங்கின் கடின உழைப்பாலும் அவர் சிந்திய வியர்வையாலும் தான் கட்சி இன்று வலுவான நிலையில் உள்ளது. நீங்கள் எழுப்பும் கோஷத்தால் வளர்ச்சி அடையவில்லை. கட்சியை வலுப்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளாக நானும் அயராது பாடுபட்டேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று முறை பயணித்திருக்கிறேன்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தின்போது மிகுந்த மனமுடைந்த நிலையில் அகிலேஷ் காணப்பட்டார்.

அரசியல் வாரிசு யார்?

வாரிசு அரசியல் இந்தியாவுக்கு புதிதல்ல. நாட்டின் முதலாவது பிரதமர் நேரு முதல் இன்றைய அரசியல் தலைமுறை வரை கட்சி பேதமின்றி வாரிசுகள் வரிந்து கட்டி நிற்கிறார்கள். அந்த வரிசையில் சமாஜ்வாதி கட்சியில் வாரிசு அரசியல் போர் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

சமாஜ்வாதி தேசிய தலைவர் முலாயம் சிங்கின் முதல் மனைவி மால்தி தேவி. இத்தம்பதியின் மகன் அகிலேஷ் யாதவ். கடந்த 2003-ல் மால்தி தேவி காலமானார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முலாயம் சிங்கின் 2-வது மனைவி சாத்னா குப்தா வெளிச்சத்துக்கு வந்தார். கடந்த 2007-ம் ஆண்டில் தனது வருவாய் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முலாயம் தாக்கல் செய்த மனுவில் சாத்னா குப்தாவை மனைவி என்று முதல்முறையாக குறிப்பிட்டார்.

சமாஜ்வாதியின் அடிப்படை உறுப்பினராக இருந்த சாத்னா குப்தா 1980-ல் முலாயம் சிங்கிற்கு அறிமுகமானார். 1988-ல் அவர்களுக்கு பிரதீக் சிங் என்ற மகன் பிறந்தான். அதற்கு முன்பே இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தது கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங் என்றும் கூறப்படுகிறது.

முதலில் சாத்னா குப்தாவை மனைவியாக ஏற்கத் தயங்கிய முலாயம், முதல் மனைவியின் மறைவுக்குப் பிறகு வெளியுலகுக்கு பகிரங்கமாக அறிவித்தார்.

வாரிசுகள் மோதல்

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2012-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி அமோக வெற்றி பெற்றது. மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்றார். அப்போதே முலாயம் சிங் குடும்பத்தில் வாரிசு மோதல் தொடங்கிவிட்டது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரதீக் யாதவை களமிறக்க அவரது தாயார் சாத்னா குப்தா விரும்பினார். ஆனால் அகிலேஷின் முட்டுக்கட்டையால் பிரதீக் யாதவ் போட்டியிடவில்லை.

அகிலேஷின் மனைவி டிம்பிள் மக்களவை எம்.பி.யாக உள்ளார். இதற்குப் போட்டியாக பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா அண்மையில் அரசியலில் நுழைந்தார். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முலாயம் யார் பக்கம்?

இந்தப் பின்னணியில் சாத்னா குப்தாவின் ஆதரவாளரும் முலாய மின் சகோதரருமான ஷிவ்பால் யாதவுக்கும் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்தது. கடந்த செப்டம்பரில் ஷிவ்பால் யாதவ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

அப்போது சமரசத்தில் ஈடுபட்ட முலாயம் சிங், சமாஜ்வாதி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அகிலேஷை நீக்கி அந்தப் பதவியில் ஷிவ்பாலை நியமித்தார்.

‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அகிலேஷ் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்படமாட்டார், தேர்தலுக் குப் பிறகு புதிய எம்எல்ஏக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்’ என்று முலாயம் அறிவித்ததால் வாரிசு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

முலாயம் குடும்பத்தில் ஒரு பிரிவினர் முதல்வர் அகிலேஷுக்கு ஆதரவாகவும் மற்றொரு பிரிவினர் சாத்னா குப்தாவுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர்.

அகிலேஷ்தான் ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்த வேண்டும் என்று அவரது சித்தப்பா ராம் கோபால் யாதவ் (முலாயமின் சகோதரர்) வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

எதிரணியில் சாத்னா குப்தா, ஷிவ்பால் யாதவ், அமர்சிங் ஆகியோர் அகிலேஷுக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர். எந்த பக்கமும் சாய முடியாமல் முலாயம் சிங் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார்.

அகிலேஷ், ஷிவ்பால், முலாயம் சந்திப்பு

லக்னோவில் நேற்று நடந்த சமாஜ்வாதி உயர்நிலை கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ், மாநில கட்சித் தலைவர் ஷிவ்பால் யாதவ் பரஸ்பரம் கடுமையாக குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த கூட்டத்துக்குப் பிறகு எதிர்பாராத திருப்பமாக அகிலேஷை அவரது இல்லத்தில் ஷிவ்பால் யாதவ் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் ஒரே காரில் கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங்கின் வீட்டுக்கு சென்றனர். அங்கு மூவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். முன்னதாக கட்சிக் கூட்டத்தில் ஷிவ்பால் யாதவ் பேசும்போது, “அகிலேஷ் யாதவ் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக தன்னிடம் தெரிவித்தார்” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதை கடுமையாக மறுத்த அகிலேஷ், ‘‘நான் ஏன் புதிய கட்சியைத் தொடங்க வேண்டும். அதற்கு அவசியமே இல்லை. எனது தந்தை தான் எனது குரு’’ என்றார்.

‘அமர்சிங் இல்லாவிட்டால் சிறைக்கு போயிருப்பேன்’

சமாஜ்வாதி கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்த கூட்டத்தின்போது பேசிய முலாயம் சிங், ‘‘அமர்சிங் மற்றும் ஷிவ்பால் யாதவ்வுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் என்னால் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. இக்கட்டான தருணங்களில் அமர் என் பக்கத்தில் இல்லாமல் போயிருந்தால் நான் சிறையில் தள்ளப்பட்டிருப்பேன். அவர் எனக்கு சகோதரர் போன்றவர். கட்சி வளர்ச்சிக்காக ஷிவ்பால் யாதவ் கொடுத்த உழைப்பையும் என்னால் மறக்க முடியாது’’ என்றார். அதே சமயம் அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை என முலாயம் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x