Published : 03 Aug 2022 04:29 PM
Last Updated : 03 Aug 2022 04:29 PM
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கியத்தில் 95 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அட்சுயுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று பின்னிரவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 90-க்கும் மேற்பட்டவர்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனகபள்ளி, அட்ச்யுதாபுரம், விசாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த விபத்து நடந்துள்ளது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி இதே சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள போரஸ் லெபாரட்டரீஸ் யூனிட்டில் நடந்த வாயுக் கசிவில் 300 பெண் பணியாளர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது விபத்துக்கான விசாரணை அறிக்கையை அரசு வெளியிடவில்லை.
விபத்து குறித்து ஹைதராபாத் இந்திய ரசாயன தொழில்நுட்ப ஆலை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. விபத்து நடந்த ஆலை சில நாட்களுக்கு மூடப்பட்டது. பின்னர் மீண்டும் அங்கு சேவை தொடங்கப்பட்டது.
அடுத்தடுத்து நடைபெறும் விபத்துகளை தெலுங்கு தேசம் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
“விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துயர நகராக மாற்றி வருகிறார். வந்தாரை வாழவைக்கும் நகர் என்ற பெயர் தற்போது துயர நகர் என்று மாறிவருகிறது” என்று தெலுங்கு தேச எம்எல்சி லோகேஷ் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் சோமு வீரராஜு, தொழிற்சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை அரசு உதறிவிட்டது போல என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT