Published : 03 Aug 2022 04:14 PM
Last Updated : 03 Aug 2022 04:14 PM
பெங்களூரு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஸ்ரீ முருகராஜேந்திர மடத்திற்குச் சென்றார்.
ஸ்ரீ முருகராஜேந்திர மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, மடாதிபதி மற்றும் சீடர்களை சந்தித்தார். அங்கு ராகுலுக்கு தாயத்து அடங்கிய கயிறு கழுத்தில் அணிவிக்கப்பட்டது.
பின்னர், ஹவேரி ஹொஸமட் சுவாமிகள் பேசுகையில், "ராகுல் காந்தி பிரதமராவார்" என்று ஆசிர்வதித்தார். அப்போது மடாதிபதி ஸ்ரீ சிவமூர்த்தி முருக சரனாரு சுவாமிகள் குறுக்கிட்டு "எங்கள் மடத்திற்கு யார் வருகை தந்தாலும் அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.
கர்நாடகா மக்கள் தொகையில் 17 சதவீதம் மக்கள் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் காலங்காலமாக பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் உட்கட்சி பூசல்: கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த மே மாதம் தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலை சரி செய்வதற்காக ராகுல் காந்தி சென்றிருந்தார்.
2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 2018 தேர்தலுக்குப் பின்னர் ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் ஒரே ஆண்டில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. எம்எல்ஏ.க்களின் கட்சித் தாவலால் பாஜக ஆட்சியை பிடித்தது. முதலில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிஎஸ் எடியூரப்பா முதல்வராக்கப்பட்டார். பின்னர் அதே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்வரானார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் தற்போது சட்டப்பேரவை கட்சித் தலைவர் சித்தராமய்யாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு தீர்வு காணவே ராகுல் காந்தி கர்நாடகாவுக்குப் பயணப்பட்டார். ஆனால், பயணத்தில் ஒரு பகுதியாக அவர் லிங்காயத் சாமியார்களின் மடத்திற்குச் சென்றார். அவர் மடத்திற்கு சென்றது பேசுபொருளாகியுள்ளது.
அதேபோல், இந்துத்துவத்தை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி மடத்திற்குச் சென்றது விவாதப் பொருளாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT