Published : 03 Aug 2022 05:49 AM
Last Updated : 03 Aug 2022 05:49 AM
அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பட்ல பெனுமர்ரா கிராமத்தில் கடந்த 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிங்கலி வெங்கய்யா பிறந்தார். சிறுவயது முதலே சுதந்திர வேட்கை கொண்ட அவர், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த 1906-ம் ஆண்டு இந்தியாவுக்காக தனி தேசியக் கொடியை உருவாக்கினார். கடந்த 1921-ம்ஆண்டு, மார்ச் 31-ம் தேதி ஆந்திராவின் விஜயவாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்றார். அவரை நேரில் சந்தித்து, தான் தயாரித்த கொடி குறித்து பிங்கலி விளக்கினார்.
காந்தியிடம் கொடியை காட்டும்போது இந்து, முஸ்லிம்களின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் சிவப்பு, பச்சை நிறம் மட்டுமே இருந்தது. அப்போது பஞ்சாபை சேர்ந்த கல்வியாளர் லாலா ஹான்ஸ்ராஜின் ஆலோசனையின் பேரில் கொடியின் நடுவில் ராட்டினம் சின்னம் இடம்பெற்றது. அதன் பின்னர் அகிம்சை, அமைதியை விவரிக்கும் வகையில் கொடியின் நடுவில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. கடந்த 1931-ம் ஆண்டு சிவப்பு நிறம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் காவி நிறம் சேர்க்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர்கொடியின் நடுவே இருந்த ராட்டினம் நீக்கப்பட்டு, அசோக சக்கரம் நீல நிறத்தில் சேர்க்கப்பட்டது.
146-வது பிறந்த தினம்
பிங்கலி வெங்கய்யாவின் 146-வது பிறந்த தினம் ஆந்திரா முழுவதும் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியில் பிங்கலி வெங்கய்யா தேசியக் கொடி ஏந்தியபடி உள்ள உருவப்படத்தை வெளியிட்டார்.
ஆந்திராவின் பாபட்ல மாவட்டம், தேவங்காபுரியில் நடந்த விழாவில் பிங்கலி வெங்கய்யாவின் பேத்தி கனகதுர்கா பவானி பங்கேற்றார். அவர் பேசும்போது, “நாங்கள் அறக்கட்டளை நிறுவி அதன்மூலம் தாத்தாவின் பெயரில் நற்பணிகளை செய்து வருகிறோம். நாட்டின் தேசியக் கொடியை வடிவமைத்தவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆந்திர மக்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT