Published : 02 Aug 2022 07:06 PM
Last Updated : 02 Aug 2022 07:06 PM
சென்னை: முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட உபகரணங்கள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் தயாரிக்க முடியாது.
மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் வரைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் விதிகள் 2018-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதன்படி வரும் 11.08.2022 முதல் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருத்துவ உபகரணங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், இலக்க வெப்பமானி (Digital Thermo Meter), அறுவை சிகிச்சை கையுறைகள், பிபிடி கிட், மருத்துவமனை படுக்கை, நோயாளி அணியும் ஆடை, தொடுவில்லை (contact lens), கிருமி நாசினி, அக்குபஞ்சர் கிட், நோயாளி எடை அளவு கருவி, குழந்தைப் படுக்கைகள் , நெற்றியின் வெப்பநிலையை கண்டறியும் பட்டை, ஸ்டெரிலைசர், ஸ்ட்ரெச்சர், போர்செப்ஸ், வலியை குறைக்க பயன்படும் ஐஸ்பேக், ட்ரெட்மில், எலக்ட்ரானிக் மசாஜர், செயற்கை விரல் ஆகியவை பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மருத்துவ உபகரணங்கள் ஆகும்.
இதன்படி பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய இணையதளம் (www.cdscomdonline.gov.in) மூலம் உற்பத்தி உரிமத்தை பெற விண்ணப்பிக்க வேண்டும். எனவே, 11.08.2022 முதல் உரிய உரிமம் இல்லாமல் இந்த மருத்துவ உபகரணங்களை தயாரிப்பது குற்றமாகும். மேலும், 11.08.2022 முதல் உரிய உரிமம் இல்லாத மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதும் குற்றம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT