Published : 01 Aug 2022 11:17 AM
Last Updated : 01 Aug 2022 11:17 AM
புதுடெல்லி: ரூபாய் நோட்டில் சாவித்ரிபாய் புலே படத்தை அச்சடிக்க திமுக எம்.பி டி.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசர் காலம் முதலான ஆணாதிக்கத்தை ஒழிக்க நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இது குறித்து இன்று விழுப்புரம் தொகுதி எம்.பி.,யான டி.ரவிக்குமார் அளித்த நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பதாவது: இந்தியாவில் காகித பணம் அச்சிட ஆரம்பித்து 200 ஆண்டுகள் ஆகின்றன.
சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ஜார்ஜ் மன்னரின் உருவப்படத்துக்குப் பதிலாக சாரநாத் தூணின் சிங்கத் தலையை நாம் ரூபாய் நோட்டில் அச்சிட்டோம். 1969 ஆம் ஆண்டில், சரியாக அரை நூற்றாண்டுக்கு முன்னர் மகாத்மா காந்தியின் நூற்றாண்டின் நினைவாக அவரது உருவம் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டது.
காகித நோட்டு அச்சிடுவது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் துவங்கியிருந்தாலும் நாணயம் அச்சிடும் வழக்கம் மிக நீண்டகாலமாகவே இங்கு நடைமுறையில் இருந்துள்ளது.
வியப்பளிக்கும் விதத்தில் இந்தியாவெங்கும் நடத்தப்பட்ட அகழ்வாராய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் அரசனின் பெயர் அல்லது உருவமே பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இது ஆண் ஆதிக்கம் நிலவியதன் அடையாளமாகவே உள்ளது.
ரூபாய் நோட்டு என்பது நமது பொருளாதாரக் கருவியாக இருந்தாலும் அது சமூகக் குறியீடாகவும் திகழ்கிறது. அதனால்தான் மகாத்மா காந்தியடிகளுக்கான நமது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது உருவத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுகிறோம்.
இப்போது சுதந்திர இந்தியாவின் முழுப் பொறுப்பிலான நிதி அமைச்சராக ஒரு பெண் நியமிக்கப்பட்டதன்மூலம் நாட்டின் பொருளாதார விவகாரங்களை நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
பெண் ஒருவரின் உருவத்தை அச்சிடுவதற்கு இதுவே சரியான தருணம். இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின்(1831-1897) உருவத்தை நமது நாட்டின் ரூபாய் நோட்டில் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT