Published : 24 Oct 2016 10:24 AM
Last Updated : 24 Oct 2016 10:24 AM
பிரதமர் வாஜ்பாய் 1999 பிப்ரவரியில் லாகூருக்கு பஸ்ஸில் செல்வதற்கு முதல் நாள் இரவு, பிரதமர் அலுவலகம் அல்லோலகல்லோலப்பட்டது; மும்பையிலிருந்து ஒரு பிரமுகர் பாகிஸ்தானுக்குத் தன்னுடன் வந்தே தீர வேண்டும் என்பதில் வாஜ்பாய் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிரமுகர் வேறு யாரும் இல்லை, பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து கல்லூரி வரை படித்த முன்னணி பாலிவுட் நட்சத்திரம் தேவ் ஆனந்த் தான். தேவ் ஆனந்தின் பரம ரசிகர்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்று வாஜ்பாய் எப்படியோ தெரிந்து வைத்திருந்தார். தேவ் ஆனந்தின் இன்னொரு பரம ரசிகர் வாஜ்பாய்க்கு உதவ முன்வந்தார்; அவரது முயற்சியால் தேவ் ஆனந்தும் டெல்லிக்கு வந்து அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தில் கலந்து கொண்டார். தேவ் ஆனந்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேவ் ஆனந்தைவிட ஒரு வயது இளையவரான வாஜ்பாய்க்கு அவருடைய அருமை தெரிந்திருந்தது.
இப்போதோ உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர் களை, கலாச்சாரத் தூதர்களை, விளையாட்டு வீரர்களை, கல்வியாளர்களை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தீவிர வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ராணுவ, ராஜீய முயற்சிகள் தராத பலனை இப்படிப் பட்ட மென்மையான உணர்வுகளை மீட்டும் முயற்சிகள் தரும் என்பதை அரசியல்வாதிகள் உணர்வதே இல்லை. பாகிஸ்தானுடனான பிரச்சினையைத் தீர்க்க எந்த அணுகுமுறையிலும் இப்போதைக்கு வழியில்லை. பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த வேண்டும், உலக நாடு களிடையே அதை பயங்கரவாத நாடாகச் சித்தரிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார் கள். இப்படிப்பட்ட அணுகுமுறை முழுக்க பலன் தராது என்பதையே கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாடும் டெல்லியில் நடந்த சந்திப்புகளும் உணர்த்துகின்றன.
ஜூனியர் புஷ் முதல் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தபோது டொனால்ட் ரம்ஸ்பெல்டு அவருடைய பாதுகாப்பு அமைச்ச ராக இருந்தார். ‘மென்மையான செல்வாக்கு மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘அப்படியென்றால் என்ன?’ என்று எரிந்து விழுந்தார். ராணுவ பலத்தாலும் முரட்டுத்தனத்தாலும் எவரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்றே சிந்தித்தார். ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் ராணுவ நடவடிக்கைகளைக் கொடூரமாக நடத்தி, ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்காமல் அரை குறையாக விட்டுச் சென்றவர் அவர். இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை புஷ் பிறகு பார்த்தார். அடுத்த முறை அதிபரானபோது கான்டலீசா ரைஸ் வெளியுறவு அமைச்சரானார். அவர் மென்மையான செல்வாக்குகளையும் பொதுவெளியிலான ராஜதந்திர நடவடிக்கை களையும் நிதானமாக மேற்கொண்டு அமெரிக்கா வுக்கு நேரிட்ட பாதிப்புகளை வெகுவாகக் குறைத்தார்.
ராஜதந்திர நடவடிக்கைகளில் மென்மையான செல்வாக்கு குறித்து ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோசப் நை ஜூனியர் என்பவர்தான் 1990-ல் முதல் முறை யாக பேசினார். 2006-ல் அது பின்பற்றப்பட்டது.
மென்மையான செல்வாக்கு என்பது உணவு, கலாச்சாரம், இலக்கியம், விளையாட்டு ஆகியவைதானா? இவை மட்டும்தான் என்றால் பனிப்போர் நடந்த காலத்தில் சோவியத் அணியை கோகா கோலா, மெக்டொனால்ட்ஸ், மைக்கேல் ஜாக்சன், மடோனோ போன்றாராலேயே கைப் பற்றியிருக்க முடியுமே? அதே பாணியில் சீனர்கள் கூட நம்மை அவர்களுடைய உணவாலும் பிற சாதனங்களாலும் கவர்ந்திருக்க முடியுமே?
மென்மையான சக்தி அல்லது செல்வாக்கு என்பது நம்முடைய தேசம் கடைப்பிடிக்கும் அறம், தேசத்தவரின் பண்புகள், கொள்கைகள், ஜனநாயகத்தின் தரம், நேர்மையான அரசியல், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நீதிமன்றம், பத்திரிகைகள், அரசு நிர்வாகம் உள்ளிட்டவற்றின் பலம் ஆகியவைதான்.
பயங்கரவாதிகளையும் நாசவேலைக்காரர் களையும் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவ வைத்து அந்த நாட்டின் மீது செல்வாக்கைச் செலுத்திவிட முடியாது. நல்ல மனதோடு நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம்தான் ஒரு நாடு இன்னொரு நாட்டைக் கவர முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்னால் செமினார் என்ற பத்திரிகையின் நினைவுச் சிறப்பிதழில், பாகிஸ்தான் மீது இந்தியா எப்படி அன்பால் செல்வாக்கு செலுத்த முடியும் என்று சிறப்புக்கட்டுரை எழுதினேன். அமெரிக்கா எப்படி தன்னுடைய ஜனநாயக வலிமை, சுதந்திரச் சமூகம், கலாச்சார செல்வாக்கு போன்றவற்றால் சோவியத் சார்பு நாடுகளை பனிப்போரில் வென்றது என்று சுட்டிக்காட்டியிருந்தேன். இதையே இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். பாகிஸ்தானுக்கு ஒரு நிருபராகச் சென்ற சமயங்களில் அந்நாட்டு தலைவர்கள் எப்படி இந்தியா மீது மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று நேரில் அறிந்து வியப்படைந்தேன். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் நிதியமைச்சராகவும் பின்னர் வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்த ஷா முகம்மது குரேஷி, ‘மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் பற்றி நீதிபதி சர்க்காரியா கமிஷன் அளித்த அறிக்கையை அனுப்பிவைக்க முடியுமா?’ என்று என்னைக் கேட்டார். நவாஸ் ஷெரீப் பிரதமரான முதல் முறை, ‘இந்தியாவில் அமலாக்கப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் பற்றி முழுமையான தகவல்களை அனுப்பித்தர முடியுமா?’ என்று கேட்டார். இதுவரையில் இந்திய ராணுவம் 29 தரைப்படை தலைமைத் தளபதிகளைக் கண்டிருக்கிறது. பாகிஸ்தானில் இதே காலத்தில் 15 தலைமைத் தளபதிகள்தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்த ஒரு அம்சம் பாகிஸ்தானியர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
இத்தகைய மென்மையான செல்வாக்கைச் செலுத்த முடிந்தாலே சுமுகமான உறவுக்கு பாதி வேலைகள் முடிந்துவிடும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சோவியத் சார்பு நாடுகள் அனைத்திலுமே ராஜ் கபூர் என்றால் அப்படியொரு பித்து பரவி யிருந்தது. 1989 கோடைப்பருவத்தில் தியானென் மென் சதுக்கத்தில் மாணவப் போராளிகள் மீது சீன டாங்கிப் படை ஏறி நசுக்கிய சம்பவம் குறித்து இந்தியாவுக்கு தொலைநகலி மூலம் செய்தியனுப்ப (அரசுக்குத் தெரியாமல்தான்) முயற்சி செய்தோம்’ அந்த ஹோட்டலின் ஊழியர்கள், ‘ஆவாரா ஹூம்’ பாடலை கேசட்டில் தொடர்ந்து ஒலிக்க வைத்தால் செய்து தருவோம் என்று எதிர் நிபந்தனை விதித்தனர். எல்லா பக்கங்களையும் அனுப்பி முடிக்கும்வரை அந்தப் பாட்டைத் திரும்பத்திரும்பப் போட்டோம்.
அமெரிக்காவுக்கு வெளிநாட்டு அரசியல் தலைவர் யார் வந்தாலும் அவர்களை ஹாலி வுட்டில் இருக்கும் படப்பிடிப்பு நகருக்கும் டிஸ்னி லேண்ட் கேளிக்கைப் பூங்காவுக்கும் அழைத்துச் செல்வதைக் கட்டாயக் கடமையாகவே செய் கின்றனர். பாகிஸ்தானுடன் பலமுறை நாம் மோதியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது பாகிஸ்தானுக்கு கசப்பான அனுபவத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையுமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT