Published : 30 Jul 2022 06:16 AM
Last Updated : 30 Jul 2022 06:16 AM
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 3 வாரங்களில் விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்கு தடைகோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு, ஓபிஎஸ்
ஸின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
ஓபிஎஸ் மேல்முறையீடு
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ‘அதிமுக பொதுக்குழுவை கூட்ட உரிய வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்த பொதுக்குழு நடந்துள்ளது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்: அதிமுகவின் அடிப்படை கட்சி விதிகள் மொத்தமாக மீறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பு நியாயம் எதையுமே சென்னை உயர் நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை.
நீதிபதிகள்: இரு தரப்பும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா?
இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள்: இணைய வாய்ப்பு இல்லை.
தலைமை நீதிபதி: (சிரித்துக்கொண்டே) சரி, அது உங்கள் பிரச்சினை. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் என்ன விதிமீறல் நடந்துள்ளது? இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன?
ஓபிஎஸ் தரப்பு: ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டங்கள் சட்ட விரோதமானவை. ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது. ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் மனுதாரரை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர். எனவே, அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்து தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி: அதிமுகவில் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது, எனவே இந்த விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை.
நீதிபதிகள்: இந்த விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் முந்தைய நிலைக்கே திரும்பவும் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. ஆனால், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட முடியும்.
ஓபிஎஸ் தரப்பு: தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடுவதாக இருந்தால், ஜூலை 11-ம்
தேதிக்கு முந்தைய நிலை தொடருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
ஓபிஎஸ் தரப்பின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து, 3 வாரங்களில் தீர்வு காண வேண்டும். அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT