Published : 30 Jul 2022 05:33 AM
Last Updated : 30 Jul 2022 05:33 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2014 - 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மெரிட் பட்டியலில் இடம் பெற்றனர். பலர் வெற்று விடைத்தாள்களை, பெயர், முகவரியுடன் சமர்ப்பித்து, உதவி ஆசிரியர்களாக நியமன ஆணைகளை பெற்றனர். இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன.
இந்நிலையில் 13,000 குரூப் டி ஊழியர்கள் நியமன குழுவின் பதவிக் காலம் 2019-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் அதன் பின்னரும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அரசு சம்பளம் பெறுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 573 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. இதில் நடந்த பணப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கிறது.
மேற்குவங்க பள்ளி சேவை ஆணையத்தில், கூடுதல் நியமனக் குழு முறைகேடாக உருவாக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், இந்தக் குழு தேர்வு செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. அப்போது கல்வித் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி லஞ்சமாக பெற்ற கோடிக்கணக்கான பணத்தை தனக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் குவித்து வைத்துள்ளார். அவருக்கு சொகுசு கார்கள், கிலோ கணக்கில் தங்க நகைகள், கொல்கத்தாவின் பல பகுதிகளில் வீடுகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த 2008-2014-ம் ஆண்டுகளில் பெங்காலி மற்றும் ஒடியா திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அர்பிதா முகர்ஜி(30). கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு நடிகையாகியுள்ளார். பார்த்தா சட்டர்ஜியுடன்(69) தொடர்பு ஏற்பட்ட பின், பல நிறுவனங்களின் இயக்குநராக வலம் வந்துள்ளார். சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த நடிகை அர்பிதா, அமலாக்கத் துறையினரிடம் சிக்கியதும், ‘‘எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் பணம் எல்லாம் பார்த்தா சட்டர்ஜி குவித்து வைத்தது’’ என கதறியுள்ளார்.
ஆசிரியர் நியமன ஊழலை எதிர்த்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சூழலில் போராட்டக் குழுவினரை திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் முதல்வர் மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இதுநாள் வரை போராட்டக் குழுவினரை சந்தித்து பேசாத திரிணமூல் தலைவர்கள், திடீரென அவர்கள் மீது அக்கறை காட்டுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT