Published : 29 Jul 2022 09:30 PM
Last Updated : 29 Jul 2022 09:30 PM
புது டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
குடியரசுத் தலைவர் குறித்து அவர் தெரிவித்த சர்ச்சை கருத்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜக எம்.பிக்கள் கண்டன குரல் எழுப்பினர். குறிப்பாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தனர்.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கண்டனத்தை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பதிவு செய்தனர். இது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே வாக்குவாதம் கூட ஏற்பட்டது.
என்ன நடந்தது? மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் நேற்று முன்தினம் (ஜூலை 27) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தான் இரு அவைகளிலும் பாஜகவினர் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார் அவர்.
“தாங்கள் வகித்து வரும் பதவியை விவரிக்க ஒரு தவறான வார்த்தையை நான் பயன்படுத்தியமைக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதனை நான் வாய்தவறி பேசிவிட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிக்கவும். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவும்” என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT