Last Updated : 29 Jul, 2022 09:39 PM

1  

Published : 29 Jul 2022 09:39 PM
Last Updated : 29 Jul 2022 09:39 PM

அரசுத் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு

நாடாளுமன்றம்.

புதுடெல்லி: “அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ''மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018-இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா? தனியார் அலுவலகங்களில் இந்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் சோதிக்கிறதா?

பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறதா? வேலை செய்யும் பெண்களுக்கு சிறந்த ஓய்வு வசதிகளை வழங்குவதற்காக அத்தகைய ஏற்பாடுகளை அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி அளித்த பதில்: ''மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் மத்திய அரசுப் பணிகளுக்கான (விடுப்பு) விதிகள், 1972இல் மாதவிடாய் விடுப்புக்கான ஏற்பாடுகள் இல்லை. மேலும், இந்த விதிகளில் அத்தகைய விடுப்பைச் சேர்க்க தற்போது எந்த முன்மொழிவும் இல்லை.

ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச் சான்றிதழில் விடுப்பு என பல்வேறு வகையான விடுப்புகள் இந்த விதிகளின் கீழ் ஒரு பெண் அரசு ஊழியருக்குக் கிடைக்கின்றன. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2011ஆம் ஆண்டு முதல் 10-19 வயதுக்குட்பட்ட பருவப் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்தத் திட்டம் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் மாநிலத் திட்ட அமலாக்கத் திட்டம் (PIP) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, பருவ வயது பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது. பருவப் பெண்களுக்கு உயர்தர சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை எளிதாக்குவது. சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சானிட்டரி நாப்கின்களை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்தல் ஆகியன.

இத்திட்டத்தின் கீழ், இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களின் பேக், அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்(ஆஷா) மூலம் மானிய விலையில் ஒரு பேக்கிற்கு ரூபாய் 6 என வழங்கப்படுகிறது.

கூடுதலாக, ஸ்வச் பாரத் அபியான் கீழ் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், துப்புரவு சுகாதாரம் குறித்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை(எம்எச்எம்) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்களை எம்எச்எம் உருவாக்கியுள்ளது.

மேலும், மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் நல்ல தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறை, பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியமானதொரு நடவடிக்கையாக ‘பிரதம மந்திரி பாரதிய ஜனஅவுஷாதி பரியோஜனா (PMBJP) என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8700 ஜனஅவுஷாதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை சுவிதா எனப்படும் மட்கும் சானிட்டரி நாப்கின்களை ஒரு பேட் ரூபாய் ஒன்றுக்கு வழங்குகிறது'' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x