Published : 29 Jul 2022 05:51 PM
Last Updated : 29 Jul 2022 05:51 PM
சென்னை: இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கார் மூலம் தொடக்க விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்ட பிரதமர், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி தமிழக பாஜகவினர் சார்பில் பல்வேறு இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த இரண்டுநாள் சென்னை பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார். அதற்கு, "சென்னை நினைவுகள்... மறக்கமுடியாத பயணத்திற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 1.55 நிமிடம் வரை ஓடக்கூடிய அந்த வீடியோவில், பிரதமரின் விமான நிலையம் வருகை, ஐஎன்எஸ் தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டரங்கம் வரையிலான கார் பயணம், பாஜவினரின் வரவேற்பு, விழா மேடைக்கு வந்தது, கலை நிகழ்ச்சிகள், நிகழ்த்துக் கலை, செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது, முதல்வர் நினைவு பரிசு வழங்குவது, பார்வையாளர்களை நோக்கி பிரதமர் கையசைப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT