Last Updated : 28 Jul, 2022 04:23 PM

 

Published : 28 Jul 2022 04:23 PM
Last Updated : 28 Jul 2022 04:23 PM

எஸ்சி, எஸ்டி காலிப் பணியிடங்களை நிரப்புக: மத்திய அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி நேரில் வலியுறுத்தல் 

விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார், மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திரா குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

புதுடெல்லி: மத்திய அரசில் காலியாக இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, விழுப்புரம் எம்.பி டி.ரவிக்குமார் இன்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திரா குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இது தொடர்பாக கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பியான ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதிலில் பிரதமர் அமைச்சகம், மத்திய அரசின் பத்து துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரிந்தது.

இந்த இடங்களை நிரப்புவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இன்று சமூக நீதித் துறை அமைச்சரிடம் ரவிக்குமார் கோரிக்கை மனு அளித்தார். இதில், தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான பேர் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து தனது கடிதத்தில் எம்.பி. ரவிக்குமார் குறிப்பிடுகையில், 'அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இவ்வளவு இடங்கள் காலியாக இருப்பது அந்த சமூகத்தையே பாதிப்பதாக உள்ளது. கல்வித் துறையில் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 81% இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. எனவே தாங்கள் இதில் கவனம் செலுத்தி உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இதற்கு மத்திய அமைச்சர் வீரேந்திரா குமார், ''எஸ்சி, எஸ்டி பணியிடங்களை நிரப்புவதற்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். நிச்சயம் அது நிரப்பப்படும்'' என எம்பி ரவிக்குமாரிடம் உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x