Published : 28 Jul 2022 05:51 AM
Last Updated : 28 Jul 2022 05:51 AM

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் | நடிகை வீட்டை மினி வங்கியாக பயன்படுத்திய அமைச்சர் - விசாரணையில் புது தகவல்கள்

அர்பிதா முகர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் 3 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

மினி வங்கியாக பயன்படுத்தினார்

இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பார்த்தா, நடிகை அர்பிதாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே நடிகை அர்பிதா முகர்ஜி அமலாக்கத் துறை அதிகாரிகளிடம், “என்னுடையவீட்டில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவருடைய நபர்கள் மட்டுமே நுழையும் ஒரு அறையில்தான் எல்லா பணமும் பதுக்கி வைக்கப்பட்டது. என் வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் பார்த்தா சட்டர்ஜி மினி வங்கியாகப் பயன்படுத்தி வந்தார். அந்தப் பெண்ணும், அமைச்சரின் மிக நெருங்கிய நண்பர்தான்.

அதுமட்டுமல்லாமல் பணத்தை எப்போதும் மற்றவர்கள்தான் கொண்டு வருவார்கள். அந்த அறையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து அமைச்சர் ஒருபோதும் என்னிடம் கூறியதில்லை” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முதல்வர் மம்தா கூறும்போது “இந்த விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால், அது சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் அனைவரையும் திருடர்கள் போல் எண்ணி செய்தி வெளியிடும் ஊடகங்களின் போக்கு சரியல்ல” என்று கண்டனம் தெரிவித்தார்.

கார் ஒப்படைப்பு

இதனிடையே கடந்த 15 ஆண்டுகளாக அமைச்சர் பார்த்தா பயன்படுத்தி வந்த அரசு கார், மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில நேற்று ஒப்படைககப்பட்டது.

இந்நிலையில், நடிகை அர்பிதாவுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக இருந்த பணம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பணம் எண்ணும் இயந்திரத்தை எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பணத்தை எண்ணி வருகின்றனர்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் தலைவருமான மாணிக்பட்டாச்சார்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x