Published : 27 Jul 2022 04:59 AM
Last Updated : 27 Jul 2022 04:59 AM

தேர்தல் ‘இலவச’ அறிவிப்பை தடுப்பது எப்படி? - வழிமுறைகளை ஆராய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தலின்போது இலவச திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை கவர்வதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவர்.

இந்த தேர்தல் இலவச அறிவிப்புகளை எதிர்த்து பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் இந்த இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்றும், இலவச அறிவிப்புகளைத் தடுக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “இலவசங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் இலவச அறிவிப்புத் திட்டங்கள் நடைமுறையை தடை செய்வதற்கான எந்தவொரு சட்டத்தையும் மத்திய அரசுதான் கொண்டு வரவேண்டும்” என்றார்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் கூறும்போது இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்துடன் இதை மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்றார்.

பின்னர் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறும்போது, “எங்களிடம் அதிகாரம் இல்லை என்று நீங்கள் (தேர்தல் ஆணையம்) ஏன் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தரவில்லை. தேர்தலில் இலவச அறிவிப்பு என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதை மத்திய அரசு நம்புகிறதா என்று கேள்வி எழுப்புகிறேன். தேர்தலின்போது இலவசத் திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். அதன் பின்னர் இலவசத் திட்டங்களைத் தொடரலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்" என்றார்.

இதைத் தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x