Published : 27 Jul 2022 05:10 AM
Last Updated : 27 Jul 2022 05:10 AM
கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பார்த்தா, நடிகை அர்பிதாவை அருகருகே அமர வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர். நடிகையின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பில்லை என்று அமைச்சர் வாதிட்டு வருகிறார். இருவருக்குமான பணப் பரிமாற்ற தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “நடிகை அர்பிதா சொந்த பட நிறுவனம் நடத்தியுள்ளார். அவரது பெயரில் பல்வேறு போலி நிறுவனங்கள் உள்ளன. அவருக்கு ஒடியா, தமிழ் மொழி திரைப்படத் துறையினருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அந்த வகையில் ஒடிசா, தமிழகத்தை சேர்ந்த மேலும் 6 நடிகைகள் மூலம் பண மோசடி நடைபெற்றிருப்பதாக தெரிகிறது” என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT