Published : 26 Jul 2022 05:14 PM
Last Updated : 26 Jul 2022 05:14 PM
புதுடெல்லி: “இந்தியா ஒரு போலீஸ் நாடு... மோடிதான் ராஜா” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடந்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுவதைக் கண்டித்தும் ராகுல் காந்தி டெல்லியின் முக்கிய சாலையான ராஜபாதையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை தடுப்புக் காவலில் கைது செய்து டெல்லி போலீஸார் அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கே.சி.வேணுகோபால், கே. சுரேஷ், இம்ரான் பிரதாகார்ஹி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸார் நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி பேசும்போது, “மத்திய அரசு சர்வாதிகார முறையில் ஆட்சி செய்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளே எந்தவித விவாதத்தையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். வெளியே போராட்டம் செய்தால் தலைவர்களை கைது செய்கிறார்கள். இந்தியா போலீஸ் நாடாக மாறிவிட்டது. மோடிதான் அதன் ராஜா” என்றார்.
முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்தனர்.
இந்தப் போராட்டத்தின்போது இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் தலைவர் சீனிவாசன் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
#WATCH | Delhi Police personnel seen pulling the hair of National President of Indian Youth Congress, Srinivas BV, and manhandling him earlier during the party's protest.
(Source: Congress) pic.twitter.com/ODyN1YjERG
விசாரணையின் பின்னணி: நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 5,000 பேரை பங்குதாரர்களாக இணைந்து கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார். இந்த பத்திரிகையை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம்(ஏஜெஎல்) நடத்தி வந்தது. அப்போது இது எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானதாக இல்லை.
காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாக செயல்பட்டு வந்தது. இந்த பத்திரிகையின் கடன் சுமை ரூ.90 கோடிக்குமேல் அதிகரித்ததால், கடந்த 2008-ம்ஆண்டு இந்த பத்திரிகை மூடப்பட்டது.கடந்த 2010-ம் ஆண்டு இதன் பங்குதாரர்களின் எண்ணிக்கை 1057-ஆக சுருங்கியது. ஏஜெஎல் நிறுவனத்தின் கடனை அடைத்துமீண்டும் பத்திரிகையை தொடங்க, காங்கிரஸ் கட்சி சார்பில் கடன் அளிக்கப்பட்டது.
அதன் பின் ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு 76 சதவீத பங்குகள் உள்ளன. எஞ்சிய 24 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸிடம் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டில் யங் இந்தியா நிறுவனம் ரூ.50 லட்சத்தை செலுத்தி, ஏஜெஎல் நிறுவனத்தின் பல கோடி மதிப்பிலான சொத்துகளின் பங்குகளை கையகப்படுத்தியது சட்டவிரோதம் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் அமலாக்கத்துறை கடந்த 2014-ம் ஆண்டு யங் இந்தியா நிறுவனம் மீது நிதி மோசடி விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை சமீபத்தில் நீண்ட விசாரணை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த சமீபத்தில் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றதால், முந்தைய சம்மன்களில் ஆஜராவதில் இருந்து சோனியா விலக்கு கோரியிருந்தார்.
இந்நிலையில், சோனியா காந்தியிடம் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT