Published : 25 Jul 2022 10:17 AM
Last Updated : 25 Jul 2022 10:17 AM
புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று (ஜூலை 25) காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முன்னதாக இன்று காலை அவர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று சந்தித்தார். அங்கிருந்து ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு ஆகியோர் புறப்பட்டு தனித்தனி கார்களில் குதிரைப்படையினர் புடை சூழ நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர்.
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படவிருந்த திரவுபதி முர்முவும் அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராணுவ தளபதிகள் விழாவில் பங்கேற்றனர்.
விழா அரங்கினுள் அனைவரும் வந்ததும் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) பதவி ஏற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதன் பிறகு 21 குண்டுகள் முழங்க புதியகுடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆகிய பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT