Last Updated : 25 Jul, 2022 07:45 AM

 

Published : 25 Jul 2022 07:45 AM
Last Updated : 25 Jul 2022 07:45 AM

திரவுபதி முர்முவை பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்

திரவுபதி முர்மு.

புதுடெல்லி: புதிய குடியரசு தலைவராக இன்று பதவி ஏற்கிறார் திரவுபதி முர்மு. இவரை பற்றி ஒடிசாவில் இருந்து பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்று பதவி ஏற்கும் திரவுபதி முர்மு, இந்தியாவின் 2-வது பெண் குடியரசு தலைவர் ஆவார். முதல் முறையாகப் பழங்குடி சமூகத்தில் இருந்து தேர்வாகி உள்ள திரவுபதி முர்முவின் வீட்டில் அவரது செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலை.பாஜக தலைமையில் ஆளும் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு கடந்த ஜூன் 21-ம் தேதி இரவுதான் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சற்று முன்பாக இரவு 8.30 மணிக்கு மயூர்பஞ்ச் மாவட்ட பாஜக செயலாளர் பிகாஷ் மஹ்தோவுக்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதில் பேசிய உயரதிகாரி, ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவிடம் பிரதமர் பேச விரும்புகிறார் எனக் கூறியுள்ளார். அவரிடம் உடனடியாக பேச வைப்பதாக பதிலளித்த பிகாஷ், செல்போனை எடுத்துக் கொண்டுஎதிர் வீட்டில் இருந்த திரவுபதியிடம் ஓடியுள்ளார். அப்போது இரவு உறங்க செல்வதற்கு தயாராக இருந்தார் திரவுபதி. அதற்குள் மீண்டும் அலறிய பிகாஷின் செல்போனில் பிரதமர் அலுவலக அழைப்பு. உடனடியாக திரவுபதியிடம் பிகாஷ் செல்போனை கொடுத்துள்ளார்.

அவரும் செல்போனில் வணக்கம் கூறிய பிறகு, மறுமுனையில் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த திரவுபதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துள்ளது. இதை குழப்பத்துடன் பிகாஷுடன் திரவுபதி மகள் இத்தீயும் அருகில் இருந்து பார்த்துள்ளனர். பிரதமருடன் பேசி முடித்த பிறகு, பிரதமர் சொன்ன தகவலை அவர்களிடம் கூறும்போதே ஆனந்தத்தில் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அதன்பின் முர்முவை இருவரும் ஆசுவாசப்படுத்தி உள்ளனர். திரவுபதியிடம் செல்போன் இருந்தாலும் சரியாக சிக்னல் கிடைக்காததால், பாஜக மாவட்ட செயலாளர் பிகாஷின் செல்போனில் அழைத்துள்ளனர்.

ஜார்க்கண்டின் ஆளுநராக திரவுபதி இருந்த போது கடைசி 6 மாதம் அவரதுஉதவியாளராக பிகாஷ் பணியாற்றியுள்ளார். மேலும், பிகாஷின் தந்தை ரவீந்திரநாத் மஹ்தோவால் திரவுபதி அரசியலில் கால் பதித்துள்ளார். கடந்த 1977-ல் திரவுபதியின் கணவர் ஷியாம் சரண் முர்முவிடம், அப்போது நடைபெற்ற நகரசபை தேர்தலில் திரவுபதி முர்முவை போட்டியிட வைக்கும்படி கூறியுள்ளார். அதற்கு, தமது குடும்பம் மிகவும் எளிமையானது, அரசியல் தங்களுக்கு ஒத்து வருவதும் தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதும் ஏற்பில்லை என்று ஷியாம் கூறியுள்ளார்.

எனினும், ரவீந்திரநாத்துடன் வந்த பாஜக உள்ளூர் தலைவர்கள் சிலரும் வற்புறுத்தி திரவுபதியை அரசியல் களம் இறக்கியுள்ளனர். அப்போட்டியில் வெற்றியும் பெற திரவுபதிக்கு நாட்டின் உயரிய பதவி பெறுவதற்கானத் தகவல், ரவீந்திரநாத்தின் மகன் பிகாஷ் மூலம் தற்போது கிடைத்துள்ளது.

கடந்த 2010-ல் மூத்த மகன் லஷ்மண், 2013-ல் இளைய மகன் ஷிபு மற்றும் 2014-ல் கணவர் ஷியாம் என மூவரையும் இழந்துள்ளார் திரவுபதி முர்மு. இதனால் தாம் ஒரு நல்ல தாயாக இருக்க முடியவில்லை என வருந்தி உள்ளார். மேலும் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளார் திரவுபதி. தம் நட்பு வட்டாரத்தினரின் வேண்டுதலால் முடிவை மாற்றி அரசியலில் தொடர்ந்துள்ளார்.

எனினும், கவலையில் இருந்து மீள, ஆன்மீக ஈடுபாட்டில் தீவிரம் காட்டியுள்ளார் சிவபக்தையான திரவுபதி. விடியலில் 3.30 மணிக்கு எழும் வழக்கம் கொண்ட திரவுபதி, யோகா பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர். பிரம்ம குமாரி ஆன்மீக வழிபாடுகளிலும் இவர் கலந்து கொள்பவர் எனத் தெரிகிறது. 2016-ல் ஜார்க்கண்டின் ஆளுநரான பின் சொந்த கிராமமான பஹத்பூரில் எஸ்.எல்.எஸ் என்ற பள்ளிக்கு தனது 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் திரவுபதி. இப்பள்ளியை நிர்வகிக்கும் கல்வி அறக்கட்டளைக்கு திரவுபதியின் ஒரே மகள் இத்தீ தலைவராக உள்ளார். இப்பள்ளியில், திரவுபதியின் மறைந்த 2 குழந்தைகள் மற்றும் கணவரின் மார்பளவு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2016-ல் ஜார்க்கண்டின் ஆளுநரான பின் சொந்த கிராமமான பஹத்பூரில் எஸ்.எல்.எஸ் என்ற பள்ளிக்கு தனது 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் திரவுபதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x