Published : 24 Jul 2022 09:57 PM
Last Updated : 24 Jul 2022 09:57 PM

“நமது குழந்தைகளுக்காகவாவது சூழலியலை பாதுகாக்க வேண்டும்” - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

தனது பதவி காலம் முடிவடையும் நிலையில் இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுடனான தனது உரையில் தெரிவித்தது…

“பிரியமான சக குடிமக்களே, வணக்கம்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என் மீது மட்டற்ற நம்பிக்கை வைத்து, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக என்னை இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். என் பணிக்காலம் முடிவடைந்த பிறகு நான் விடைபெறும் வேளையில் உங்கள் அனைவரோடும் நான் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய சக குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவருக்கும் என் ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு நான் தொடங்குகிறேன். நாடெங்கும் நான் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது, குடிமக்களுடனான என்னுடைய இடைவினைகள் எனக்கு உத்வேகத்தையும், சக்தியையும் அளித்தன.

  • பரௌங்க் (Paraunkh) கிராமத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் உங்களிடத்திலே உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால், உயிர்ப்புடைய நமது ஜனநாயக அமைப்புகளில் இருக்கும் சக்தி தான் காரணம்.
  • நான் எனது கிராமம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், எனது பணிக்காலத்தில் எனது இல்லத்திற்குச் சென்று, கான்பூரில் உள்ள எனது ஆசிரியர்களின் பாதம் பணிந்து அவர்களின் நல்லாசிகளைப் பெற்ற கணங்கள் என் வாழ்க்கையிலே மிகவும் நினைவில் கொள்ளத்தக்கவையாக நான் கருதுகிறேன் என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
  • தேசம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. அடுத்த மாதம் நாம் அனைவரும் நமது சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவோம். நாம் அமிர்த காலத்திற்குள் நுழைவோம், இது நமது சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய 25 ஆண்டு காலம். இந்த ஆண்டு விழாக்கள் எல்லாம் நமது குடியரசின் பயணத்தின் மைல்கற்கள். தனது வல்லமையைத் தெரிந்து, உலகிற்குத் தனது சிறந்த பங்களிப்பை ஆற்றக்கூடிய பயணம்.
  • 1915ஆம் ஆண்டு காந்தியடிகள் தாய்நாடு திரும்பிய போது, தேசிய உணர்வு வேகம் பெற்றுக் கொண்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தின் சில தசாப்தங்களுக்கு உள்ளாகவே, அசாதாரணமான சிந்தனாசக்தி படைத்த தலைவர்கள் பலர், வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருந்தது ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே நான் உறுதியாக கருதி வந்திருக்கிறேன். நமது கலாச்சார வேர்களை நாம் கண்டுபிடிக்க, ஒரு நவீனகால ரிஷியை போல உதவியவர் என்றால் அது குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் ஆவார். அதே போல, பல முன்னேறிய நாடுகளிலும் கூட கேள்விப்பட்டிராத சமத்துவத்தின் தரப்பில், மும்முரமாக வாதிட்டு வந்தார் பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர். திலகர் முதல் கோகலே, பகத் சிங், நேதாஜி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யா என மனிதகுல வரலாற்றிலே ஒரு பொது நோக்கத்திற்காக இத்தனை மகத்தான மனிதர்கள் ஒருங்கிணைந்ததைக் காண முடியாது.
  • அரசியலமைப்பு அவையிலே, அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, தனது நிறைவுரையில், இருவகையான ஜனநாயகங்கள் குறித்து டாக்டர். அம்பேத்கர் குறிப்பிட்டார். வெறும் அரசியல் ஜனநாயகத்தோடு நாம் நிறைவு கண்டுவிடக் கூடாது என்று அவர் கூறினார். அவரை நான் மேற்கோள் காட்டுகிறேன், “நாம் நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாகவும் ஆக்க வேண்டும். அதன் அடித்தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லையென்று சொன்னால், அரசியல் ஜனநாயகத்தால் நீடித்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? அதாவது சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறையையே இது குறிக்கிறது. இவற்றைப் பிரித்துப் பார்ப்பது என்பது, ஜனநாயகத்தின் அடிப்படைக் காரணத்தையே தோற்கடிப்பது போலாகும்” என்றார்.
  • இன்றைய எளிய குடிமகனுக்கு இந்த ஆதர்சங்கள் எதைக் குறிக்கிறது? வாழ்க்கையை வாழ்வதில் உள்ள மகிழ்வைக் கண்டுபிடிக்க உதவுவதே முக்கியமான இலக்கு என்று நான் நம்புகிறேன். இதன் பொருட்டு, முதன்மையாக, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஆதாரங்களின் தட்டுப்பாடுகள் என்ற நாட்களைத் தாண்டி நாம் நீண்ட தொலைவு பயணித்து விட்டோம். மேம்பட்ட வீட்டுவசதி, குடிநீர் - மின்சாரம் ஆகியவற்றை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு சேர்ப்பது என்ற இலக்கு நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பாரபட்சமறியா நல்லாளுகை, வேகமான வளர்ச்சி ஆகியவை வாயிலாகவே இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது.
  • அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்ட பிறகு, தங்களுடைய திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் தீர்மானப்படி செயல்புரிய சுதந்திரமளிப்பதன் வாயிலாக, ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியைத் தேடி பெற அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் கல்வி தான் திறவுகோலாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையானது, இளம் இந்தியர்களைத் தங்களுடைய பாரம்பரியத்தோடு இணைப்பதோடு, 21ஆம் நூற்றாண்டில் அவர்கள் உறுதியாகக் கால்பதிக்க பெரிய வகையில் உதவி புரியும் என்று நான் நம்புகிறேன். அவர்களின் நாளைய வளமான வாழ்விற்கு, ஆரோக்கிய பராமரிப்பு மிக அவசியம். பொதுமக்களுக்குப் பயனாகும் உடல்நலக் கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, பெருந்தொற்று அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இந்தப் பணிக்கு அரசாங்கம் உச்சபட்ச முதன்மை அளித்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கல்வியும், ஆரோக்கியமும் கவனித்துக் கொள்ளப்பட்டால், தங்களுடைய வாழ்க்கைக்கான சிறந்த பாதையை தேர்ந்தெடுக்க, பொருளாதார சீர்த்திருத்தங்கள் குடிமக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக ஆக்குவதில் நாடு தன்னைத் தயார் செய்து கொண்டு வருகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
  • என் பதவிக்காலத்தின் ஐந்தாண்டுகளில், என் திறமைக்கேற்ப சிறப்பான வகையில் என் பொறுப்புக்களை நான் நிறைவேற்றி இருக்கிறேன். டாக்டர். இராஜேந்திர பிரசாத், டாக்டர். ச. இராதாகிருஷ்ணன், டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் போன்ற மகத்தான ஆளுமைகளுக்குப் பின்னவராக நான் வந்திருக்கிறேன் என்பது குறித்து நான் விழிப்போடு இருந்திருக்கிறேன்.
  • இயற்கை அன்னை ஆழ்துயரில் இருக்கிறாள், நமது பூமியின் எதிர்காலத்தையே கூட பருவநிலைச் சங்கடம் ஆபத்துக்கு உள்ளாக்கலாம். நாம் நமது சுற்றுச்சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில், வாடிக்கையான தேர்வுகளில், நமது மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும். தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில், என் சக குடிமக்களுக்கு ஆலோசனை ஒன்று நான் வழங்க வேண்டுமென்றால் அது இதுவாகவே இருக்கும்.
  • எனது உரையின் நிறைவில், என் சககுடிமக்களுக்கு நான் எனது உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத அன்னைக்கு என் வணக்கங்கள்!! உங்கள் அனைவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

நன்றி, ஜெய் ஹிந்த்!!” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x