Published : 24 Jul 2022 07:13 AM
Last Updated : 24 Jul 2022 07:13 AM

சமூக நீதி பற்றி அரசியல் கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும் - பிரியாவிடை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பேச்சு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதை முன்னிட்டு அவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று மாலை பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்.பி.க்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: சமூக நீதி பற்றி அரசியல் கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும் என நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த பிரியா விடை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், குடியரசுத் தலைவருக்கு நேற்று மாலை பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.

இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் கையெழுத்திட்ட புத்தகம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றேன். அனைத்து எம்.பி.க்களுக்கும் என் மனதில் சிறப்பான இடம் உண்டு. எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற விவாதத்தில் பங்குபெறுவதோடு, காந்திய கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது போல், நாடாளுமன்றத்திலும் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. நாம் அனைவரும் நாடாளுமன்ற குடும்ப உறுப்பினர்கள். நமது முன்னுரிமை, நாடு என்ற கூட்டுக் குடும்பத்தின் நலனுக்கு தொடர்ந்து செயலாற்றுவதாக இருக்க வேண்டும். சமூக நீதி பற்றி அரசியல் கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

நான் எனது கடமைகளை சிறப்பாக செய்தேன். எனது பதவிக்காலத்தில் ஆதரவு அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சர்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு நன்றி. குடியரசுத் தலைவராக சேவை செய்ய வாய்ப்பளித்த நாட்டு மக்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

நாட்டு மக்களுக்கு இன்று உரை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்று நிறைவு பெறுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அவர் இன்று பிரியாவிடை உரையாற்றுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x